தருமபுரி: வெற்றி வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு !

தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வெற்றி வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று (மார்ச் 29) அரூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ரங்கன்வலசு, மந்திகுளாம்பட்டி, சிக்களூர், தெத்தேரி, நரிப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து, மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் இரு கழகங்களையும் ஓரங்கட்டி வெற்றியை நோக்கி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி சென்றுக் கொண்டிருக்கிறார். செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், பாமக மாநிலத் தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா போட்டியிடுவதால் தருமபுரி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. சௌமியா அன்புமணி தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். எனவே, இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

இங்கு, திமுக வேட்பாளராக மணி, அதிமுக வேட்பாளராக அசோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மணி இதற்கு முன்பு தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். அதிமுக அசோகன் புதிய முகம்.

பாமக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் வேட்பாளர். எனவே, கட்சியின் மொத்த பலமும் தொகுதியில் காணப்படும் என்பதால் சூடு குறையாத தேர்தல் களமாக தருமபுரி தொகுதி மாற்றம் அடைந்துள்ளது.

திமுகவை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்பதற்காக பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், திமுகவினரையும் கூட்டணி கட்சியினரையும் வேலை வாங்கி வருகிறார்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது அதிமுக.மாவட்டத்தின் 5 தொகுதிகளில் 3ல் அதிமுகவும், 2ல் பாமகவும் வெற்றி பெற்றன. அதன் மூலம் தருமபுரி மாவட்டம் அதிமுக-வின் கோட்டை என்ற தோற்றத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. இந்த முறையும் அந்த பெருமையை நிலைநிறுத்திக் கொள்ள தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆனால் இந்த முறை அதிமுகவின் கனவு பலிக்காது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட திமுக வேட்பாளர் செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகளை பெற்று வென்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அந்த தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட்டு 53 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 19 ஆயிரம் வாக்குகளையும், மநீம 15 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 2014 மக்களவைத் தேர்தலை திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொண்ட நிலையில், பாஜக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதிமுக வேட்பாளர் மோகனை இரண்டாம் இடத்துக்கும், திமுக வேட்பாளர் தாமரைச்செல்வனை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதற்கு முந்தைய 2009 மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் மருத்துவர் செந்திலை இரண்டாம் இடத்துக்கும், தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி திமுக வேட்பாளர் தாமரைச் செல்வன் 3 லட்சத்து 65 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவ்வாறு, ஒரே கட்சி தொடர்ந்து வெற்றியை நிலைநாட்டாத தருமபுரி மக்களவைத் தொகுதியில், இன்றைய நிலவரப்படி நிறைய நீர்ப்பாசன திட்டங்கள் கோரிக்கை வடிவிலேயே உள்ளன. சொந்த நிலம் இருந்தும் நீர் வளம் இல்லாததால் வெளி மாநிலங்களில் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் வேளாண் சமூகங்களை, சொந்த ஊரில் நிரந்தரமாக குடியமர்த்த இந்தத் திட்டங்கள் பேருதவியாக அமையும்.

அதேபோல, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தையும் இன்றுவரை திமுக அரசு செயல்படுத்தவில்லை. இவைதவிர, வேளாண்மை, சுற்றுலா, கட்டமைப்பு, அடிப்படை வசதி உள்ளிட்டவை தொடர்பான பல கோரிக்கைகளும் காத்திருப்பில் உள்ளன.

இந்த நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

தருமபுரி தொகுதியில் ஏற்கனவே வாக்குவங்கி பலம் மிக்க பாமக,  பலம் வாய்ந்த பாஜக கூட்டணியில் இருப்பதால் இரு கழகங்களையும் பின்னுக்கு தள்ளி முன்னேறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எளிதில் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்றே சொல்லலாம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top