‛இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 29) பிரசாரம் செய்த போது பேசுகையில்,
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேட்பாளர், அண்ணன் வேணுகோபால் அவர்களை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளெனக் கலந்து கொண்டது, திமுக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் டி.ஆர்.பாலு வேண்டாம் என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர் என்பதை உணர்த்துகிறது.
மத்தியில், மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், நமது அண்ணன் வேணுகோபால் அவர்கள் வெற்றி பெற்றால், ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து, தொகுதிக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றுத் தருவார். மற்ற கட்சிகளால் அது முடியாது. எனவே, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், சைக்கிள் சின்னத்தைத் தவிர, மற்ற கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றவை.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், நமது நாடு உலகப் பொருளாதார வரிசையில், 11 ஆம் இடத்திலிருந்து, 5 வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 3வது இடத்தைப் பிடிக்கும். நாடு முழுவதும், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி முத்ரா கடனுதவி, 45 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6,000 ரூபாய் என ஐந்து ஆண்டுகளில் ரூ.30,000, உஜ்வாலா திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், நமது மத்திய அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக, மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவில் அதிகக் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, என சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் அத்தனை வரிகளையும் உயர்த்தியிருக்கிறது. தங்கள் நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போட்டது, அனைத்து மகளிருக்கும் மாதம் ரூபாய். 1,000 என்று கூறி, 70% மகளிருக்குத் தகுதி இல்லை என்று மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் புறக்கணித்தது, நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவோம் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றியது, கல்விக் கடன் தள்ளுபடி என்று மாணவர்களை ஏமாற்றியது, 100 நாள் வேலைத் திட்ட நாட்களையும் ஊதியத்தையும் அதிகப்படுத்துவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்தது என, பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே கோபாலபுரக் குடும்பம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், டி.ஆர். பாலுவின் மனைவியுடைய சொத்து மதிப்பு ரூ.97 லட்சத்தில் இருந்து, ரூ.4.42 கோடியாக, சுமார் 350% உயர்ந்திருக்கிறது. இதுதான் டி.ஆர். பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்காக செய்த ஒரே பணி. கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த 595 தேர்தல் வாக்குறுதிகளில், 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், தற்போது மீண்டும் பொய் சொல்லியிருக்கிறது திமுக.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், நாட்டுக்கான தேர்தல். நாட்டின் பாதுகாப்புக்கான தேர்தல். ஆனால், இதே ஸ்ரீபெரும்புதூர் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளைக் கட்டி அணைத்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக இந்தத் தேர்தலை தமிழகத்துக்கான தேர்தல் என்பதைப் போல பேசிக் கொண்டிருக்கிறது. அதிமுக, இதனை உள்ளாட்சித் தேர்தல் போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் நேரடியாகப் பேசி திட்டங்களைக் கொண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் நமது தேவை.
அடுத்த இருபது நாட்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும், தங்கள் சொந்தக் கட்சிக்காக உழைப்பது போல கடுமையாக உழைத்து, எளிமையான, நமக்காகப் பணி செய்யும் பாராளுமன்ற உறுப்பினராக அண்ணன் வேணுகோபால் அவர்களை சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தின் அரசியலை மாற்றிய சைக்கிள் சின்னம், ஸ்ரீபெரும்புதூர் அரசியலையும் மாற்றப் போவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.