திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி. மட்டும் எப்படி செய்வார்: அண்ணாமலை கேள்வி!

திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் என கோவை பிரசாரத்தில் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சிவானந்தா காலனி, காந்திபுரம், சிஎம்சி காலனி, காமராஜபுரம், காட்டூர் விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 03) வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:

வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நமது பிரதமர் கடந்த பத்து ஆண்டுகளாக, நாட்டின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது தொலை நோக்குப் பார்வையிலான எண்ணங்களை, மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி.

கோயம்புத்தூரின் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், கோவையில் வளர்ச்சிப் பணிகளைச் செய்யத் தவறிவிட்டார். எளிமையாக இருப்பது வேறு. மக்களுக்கான பணிகளை நிறைவேற்றாமல் இருப்பது வேறு. கடந்த பத்து ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி, கோவையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கியும், மத்திய அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினரால், கோவையின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. நகரெங்கும் குண்டும் குழியுமான சாலைகள், தண்ணீர்ப் பிரச்சினை என மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, தற்போது நடைபெறவிருப்பது, நாட்டிற்கான தேர்தல். திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், திமுக அமைச்சர்கள், திமுக மேயர், திமுக கவுன்சிலர்கள் செய்யாதவற்றை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் எப்படி செய்யப் போகின்றார். பாராளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது, பொதுமக்களுக்கு எந்தப் பலனையும் தராது என்பது கடந்த பத்து ஆண்டுகளில் நாம் கண்ட உண்மை.

இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும், மாற்றம் கண்டு, உட்கட்டமைப்பு மேம்பாடு, திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கும் தீர்வு கண்டு, நமது கோவை அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்ட, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறப்புக் கவனம் நமது கோவைக்குக் கிடைக்க, கோவை மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம், தாமரை சின்னம். அனைத்து மக்களும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். நல்லவர்கள் அனைவரும் முன் வந்து வாக்களித்தால்தான், மக்கள் விரும்பும் மாற்றம் உருவாகும். மத்திய அரசின் நலத்திட்டங்களும் முழுமையாகப் பெற முடியும்.

வரவிருக்கும் தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேர்தல். நமது குழந்தைகளுக்கு ஒரு வலிமையான, வளமான நாட்டை உருவாக்க அடித்தளம் அமைக்கும் தேர்தல். நமது நாட்டை வளப்படுத்தவும், பலப்படுத்தவும், தன் ஒருவரால்தான் முடியும் என்பதை, கடந்த பத்து ஆண்டுகள் ஊழலற்ற நல்லாட்சியின் மூலம் நிரூபித்திருக்கிறார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். எனவே, அனைவரும், அவரது கரங்களை வலுப்படுத்த, சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், கோயம்புத்தூருக்குச் சேவை செய்யும் வாய்ப்பினை, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலை ஆகிய எனக்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்குப் பதிவு எந்திரத்தில் முதல் இடத்தில் இருக்கும், சாமானிய மக்களின் சின்னம், இளைஞர்களின் சின்னம், தாய்மார்களின் சின்னம், வளர்ச்சியின் சின்னம், அடுத்த தலைமுறையின் சின்னம், நமது பாரதப் பிரதமரின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top