புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது நமது பாஜக அரசு என்று தேசிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர், விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் (ஏப்ரல் 07) பிரசாரம் செய்தார்.
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பரப்புரையில் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், காசி-தமிழ்ச் சங்கமத்தை நிறுவியதன் மூலம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அம்சங்களில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறோம்.
வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான நாகரீக தொடர்புகளை மேம்படுத்துகிறோம். கரூர் மக்கள் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டதன் மூலம் பா.ஜ.க.வுக்கு கரூர் மக்கள் ஆதரவு இருப்பது தெரிந்தது.
“மீண்டும் ஒரு முறை மோடி அரசு” என்ற மந்திரத்தை முன்வைத்து வரும் தேர்தலில் மீண்டும் தாமரை மலர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உறுதியாக பதிந்திருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.