கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி வழங்கியும், தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகள் அதனை மக்களுக்கு முழுவதுமாகக் கொண்டு சேர்க்கவில்லை என கோவை தொகுதியின் பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தை பாஜக வேட்பாளரும், தலைவருமான அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (ஏப்ரல் 07) மாலை கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, பூமலூர், 63 வேலம்பாளையம், கல்லம்பாளையம், தெற்குபாளையம், மாணிக்காபுரம், பனப்பாளையம் நல்லூர்பாளையம், பொன் நகர், ஏ.பி.நகர், சென்னிமலைப்பாளையம் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்தாண்டு கால நல்லாட்சியில், நமது நாடு பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது. உலக அரங்கில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. நாடு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் முன்னேறியிருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்துக்கு ரூ.10.76 லட்சம் கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, உட்கட்டமைப்பு வசதிகள், செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் மட்டும், சுமார் 45 லட்சம் விவசாயிகளுக்கு, வருடம் ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.30,000, ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக இருந்த கடினமான பிரச்சினைகளான, ஆர்டிகிள் 370 பிரச்சினை, ராமர் கோவில் அமைப்பது என, முக்கியமானவை அனைத்துக்கும், கடந்த 10 ஆண்டுகளில் தீர்வு கண்டுள்ளோம்.
அதே நேரம், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி வழங்கியும், தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகள் அதனை மக்களுக்கு முழுவதுமாகக் கொண்டு சேர்க்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, சிறிய பிரச்சினைகளாக இருந்தவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அவற்றை வளரவிட்டு, பத்து ஆண்டுகளில் பெரிய பிரச்சினைகள் ஆக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, நமது கொங்கு பகுதியில், தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்திருக்கிறது. 1958 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்து, இன்று வரை அது குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார்கள். மின்சாரக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி, விசைத்தறித் தொழிலையே நசிவுக்குள்ளாக்கியிருக்கிறது திமுக. கடந்த பத்து ஆண்டுகளில், இவற்றிற்கு தீர்வு பெற்றுத் தந்திருக்க வேண்டிய அதிமுக, கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவை குறித்துப் பாராளுமன்றத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பேசவே இல்லை.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்களைப் பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. அவரது ஆட்சியில், நமது கோவை தொகுதிக்கான நலத்திட்டங்களை உரிமையுடன் கேட்டுப் பெற்றிட, ஆனைமலை நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்திட, விசைத்தறி பிரச்சினைக்கு, ஒரே ஆண்டில் நிரந்தரத் தீர்வு கொண்டுவர, வீடுகள் இல்லாதவர்களுக்கு, அடுக்குமாடி வீடுகள் கிடைத்திட, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைத்திட, நமது குழந்தைகளுக்கு, உலகத் தரத்திலான கல்வி இலவசமாகக் கிடைத்திட, இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெருகிட, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.