தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள், இன்று (ஏப்ரல் 12) வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சாமானிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்கள் என, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னிறுத்தும் பொதுமக்கள் மற்றும், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலக வரைபடத்தில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் வண்ணம், 100 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்பதே நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் உறுதியான கேரண்டி.
மோடியின் கேரன்டி இருக்க பயம் எதற்கு:
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறைதீர்ப்பு மையமாக செயல்படும்.
கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும். கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
தமிழகத்தில் இரண்டாவது Indian Institute Of Management (IIM) கோவையில் நிறுவப்படும்.
விவசாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை& நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். கோவையின் ஜீவநதியாக இருக்கும் நொய்யல் நதி மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகளை மீட்டெடுத்து கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும்.
விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வண்ணம் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பவர் டெக்ஸ் திட்டத்தின் கீழ் சூரிய மின் தகடுகள் அமைக்க மற்றும் சாதாரண நாடா இல்லாத விசைத்தறிகளாக மாற்ற வழங்கப்படும் மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும்.
கோவையில் என்.ஐ.ஏ., என்.சி.பி. கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
கோவையில் Automotive Corridor அமைக்கப்படும். கோவை Defence Corridor- ல் செமிகண்டக்டர்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.
கோவை பாராளுமன்றத்தில் மத்திய அரசின் 4 நவோதயா பள்ளிகளை அமைத்து, நமது குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இந்த பகுதியின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டுப் பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம், பாட்டியாலாவின் (SAI Patiala) கிளை பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும்.
கோவை பாராளுமன்றத்தில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வயோதிகர்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய கோவையில் உலக தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மீக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும். சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க உதவி மையம் அமைக்கப்படும்.
கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 Food Bank (உணவகம்) நிறுவப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில், கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசு வழங்கிய அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஆகியவை சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இந்த தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகளின் மீதும், அதற்கு காரணமானவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
உலக வரைபடத்தில் கோவையை முதன்மையாக்குவோம்:
கோயம்புத்தூர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில், உலக அளவில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில், நமது கோயம்புத்தூரும் ஒன்று. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் கோயம்புத்தூர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொட்டிலாக விளங்குவதோடு அல்லாமல் நொய்யல், சிறுவாணி போன்ற ஆறுகளால் விவசாயம் தழைத்தோங்கும் பகுதியாகவும் விளங்குகிறது. ஆட்டோமொபைல் தொழில், ஜவுளித் தொழில், மோட்டார் பம்ப் செட்டுகள், ஃபவுண்டரி, தங்க நகைகள், வெட் கிரைண்டர்கள் என பல்வேறு தொழில் உபகரணங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலைகளால் நிறைந்துள்ளது நமது கோயம்புத்தூர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கும் முன்பாக உருவாக்கப்பட்ட கோவை மாவட்டம்தான், தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம். ஆண்டு தோறும் பல ஆயிரம் தகுதியான மாணவர்கள் கோயம்புத்தூரில் கல்வி பயின்று, உலக அளவிலான நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அதுமட்டுமல்லாது, விவசாயத்துக்கும், சுற்றுலாத்துறைக்கும் பெயர்போன பூமி நமது கோயம்புத்தூர்.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கோயம்புத்தூரின் சிறப்புக்கு எந்தக் குறைவும் ஏற்பட்டிருக்காது. ஏனெனில், கோயம்புத்தூர் அரசின் உதவியால் வளர்ந்த நகரம் அல்ல. மக்களின் கடின உழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் வளர்ந்த நகரம். ஒரு அரசின் பணி என்பது, இத்தனைச் சிறப்பு மிக்க நகரம் மென்மேலும் வளர உதவுவதும், ஏற்கனவே இருக்கும் தொழில்களை மேம்படுத்த உதவுவதுமாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால், கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு, இத்தனை ஆண்டு காலமாக தமிழகத்தை ஆண்ட, ஆளுகின்ற கட்சிகள் உதவி செய்துள்ளார்களா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். கோயம்புத்தூரின் வளர்ச்சியை, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், கோயம்புத்தூர் சந்தித்த பிரச்சினைகள் எத்தனை, புறப்கணிப்புகள் எத்தனை? மின்சாரக் கட்டண உயர்வு தொடங்கி, சிறு குறு நிறுவனங்கள் சந்தித்த பாதிப்புகள், நில ஆக்கிரமிப்பு, பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அத்திக்கடவு அவிநாசி திட்டம். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், சமீபத்தில் சுமார் நூறு கோடி ரூபாய் அளவில் மாநில அரசு திரும்ப வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி என கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகள் எத்தனை? இதற்கு மேல், கோயம்புத்தூர் குறித்துப் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமலேயே ஐந்து ஆண்டுகளைக் கழித்த பாராளுமன்ற உறுப்பினர். தாங்கள் எதுவும் செய்யாமலேயே கோயம்புத்தூர் நகரம் நிச்சயம் வளரும் என்பது இவர்கள் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், மக்களின் மீது அன்பு கொண்ட மக்கள் பிரதிநிதிகள், அந்த வளர்ச்சியைப் பல மடங்கு அதிகப்படுத்த விரும்புவார்கள். அதன் மூலம், நம் அடுத்த தலைமுறைக்கு, எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கையை, நகரத்தை, மாநிலத்தை, நாட்டை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை போல.
கோயம்புத்தூரின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1455 கோடி ரூபாய், கோவை சர்வதேச விமானநிலைய விரிவாக்கத்திற்கு 2000 கோடி ரூபாய், 580 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை புனரமைக்க 75 கோடி ரூபாய், 53,688 பேருக்கு பிரதமரின் அனைவருக்குமான வீடு திட்டத்தின் கீழ் வீடு, 3,30,588 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,14,763 வீடுகளில் இலவச கழிப்பறைக்கள், 43,451 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,19,709 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 62,893 விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 என இதுவரை ரூ.30,000, புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க, ரூ.9,602 கோடி முத்ரா கடன் உதவி, உள்ளிட்ட இவை அனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டவை. இவற்றில் விளம்பரம் இல்லை. பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் இல்லை. இலவசம் என்ற பெயரில் ஏமாற்றவில்லை. ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இல்லை. பொதுமக்களுக்கே நேரடியாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
கோயம்புத்தூரின் பிரச்சினைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே கேள்வி எழுப்பாத, வளர்ச்சித் திட்டங்களைக் கேட்டுப் பெறாத, பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, நமது கோயம்புத்தூரின் நலனுக்காக இத்தனை திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது என்றால், நம் கோயம்புத்தூருக்காக, நம் மக்களுக்காகப் பேசும் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம்?
நமது தேவை, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காகப் பாராளுமன்றத்தில் பேசுகின்ற லஞ்சம், ஊழல் இல்லாத, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தொகுதி மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர். நமது கோயம்புத்தூரை, உலக அளவில் மிக முக்கியமான நகரமாக மாற்ற விரும்புகின்ற, மாற்றும் திறன் படைத்த நமது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கனவைச் செயல்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்.
கோவைக்கான உட்கட்டமைப்பு திட்டங்கள்:
உலகத் தரத்தில் விமான நிலையம்
இதுவரை கோவையின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் கண்டுகொள்ள தவறிய கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து நவீனமயமான விமான முனையமாக மாற்றுவோம். இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்துவோம். விமான சரக்கு முனையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
மெட்ரோ ரயில் சேவை:
கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளிக்கிறோம்.
புறநகர் ரயில் சேவை:
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் கோவையில், மக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவும், வருங்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும், கோவை நகரை சுற்றி புறநகர் ரயில் திட்டம் தேவைப்படுவதாக பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதனை பரிசீலித்து, கோயம்புத்தூர் சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், இருகூர் ரயில் நிலையம், சிங்காநல்லூர் ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புறநகர் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செட்டிப்பாளையம் முதல் கரூர் வரை பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் வழியாக புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
கோவை மக்களின் வசதிக்காக கோவைக்கென்று தனி ரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று புதிய ரயில் முனையங்களும் உருவாக்கப்படும், மேலும் வடகோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் முனையங்களாக தரம் உயர்த்தப்படும். கோயம்புத்தூர் ரயில் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
கோவை எக்ஸ்பிரஸ் போன்று கோவை, பொள்ளாச்சி, பழனி, மதுரை, திருநெல்வேலி தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலப் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி, துடியலூர், லாலி ரோடு சந்திப்பு, வடவள்ளி, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி பொன்மலையில் உள்ளது போன்று கோவை போத்தனூர் அல்லது வடகோவையில் ரயில்வே பணிமனை அமைத்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கோவை மக்கள் தென் தமிழகம் விரைந்து செல்ல அவர்களின் பயன்பாட்டிற்காக கோவை, கன்னியாகுமரி, கோவையிலிருந்து கொச்சி வழியாக திருவனந்தபுரம் வரை புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
கோவைக்கான சாலை திட்டங்கள்:
கோவை, திருச்சி சாலை புதிய 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படும். கோவை, கரூர் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மேலும் வளர்ச்சியடைய தற்போது இரண்டு வழி சாலையாக உள்ள பல்லடம், கரூர் தேசிய நெடுஞ்சாலை 81, ஆறு வழிச்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நடைபயிற்சிக்கு தனி பாதை:
நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, சைக்கிள் பயணம் ஆகியவற்றிற்கு பிரத்யேகமான நவீன பாதை வசதிகள் உருவாக்கப்படுவதோடு, உயர் தரத்தில் யோகா, தியான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
பராமரிப்பு உறுதி செய்யப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி:
மக்கள் அடர்வு அதிகம் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வசதி மற்றும் இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இவற்றை பொது மக்கள் தயக்கம் இல்லாமல் எந்நேரமும் பயன்படுத்த ஏதுவாக முறையாக பராமரிக்க திட்டம் வகுக்கப்படும்.
கோவைக்கு புதிய பேருந்து முனையம்:
திருச்சி சாலை, அவிநாசி சாலைக்கு இடையே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.
கோவைக்கு புதிய மேம்பாலங்கள்:
எதிர்காலப் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி, துடியலூர், லாலி ரோடு சந்திப்பு, வடவள்ளி, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு நெடுஞ்சாலை பணிகள் விரைவு படுத்தப்படும்.
கோவையில் இருந்து சத்தியமங்கலம் வழியாக, பெங்களூரு வழியாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவைக்கான விவசாயம் சார்ந்த திட்டங்கள்:
அத்திக்கடவு, அவிநாசி திட்டம் 2.0
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக கோவை மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருவது அத்திக்கடவு, அவிநாசி திட்டம். 1957ல் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு மாரப்ப கவுண்டர் அவர்களால் காமராஜரிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்ட இத்திட்டம் தற்போது வரை முழுமை அடையாமல் இருப்பதற்கு தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் மட்டுமே காரணம். கடந்த 2021 முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் திறப்பு விழா 25 முறைக்கும் மேல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தொடர்ந்து மக்களை ஏமாற்றிவரும் திமுக அரசின் போலி முகத்தை கிழித்தெறிந்து இரண்டாம் அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தின் மூலம் விடுக்கப்பட்ட குளங்கள் இணைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்:
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் நீர் ஆதாரத்தை உறுதி செய்ய அரை நூற்றாண்டுக்கு முன்பு போடப்பட்ட ஆனைமலையாறு, நல்லாறு சிற்றணை திட்டத்தை, மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் மீது அக்கறையில்லாமல் திராவிட கட்சிகள் கிடப்பில் போட்டுள்ளது. 1958ல் ஒப்பந்தம் மேற்கொண்டு 66 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1970ல் அணையை கட்டத் தொடங்கிய கேரள அரசு, 1985ல் பணிகளை முடித்து, அதை பயன்பாட்டுக்கும் கொண்டு வந்துவிட்டது. தமிழக அரசு அணையை கட்ட உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 8.5 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பாண்டியாறு, புன்னம்புழா நீர்ப் பாசன திட்டம்:
கடந்த 40 ஆண்டு காலமாக முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக அரசால் கிடப்பில் போடப்பட்ட திட்டம் பாண்டியாறு, புன்னம்புழா நீர்ப்பாசன திட்டம். பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான இத்திட்டத்தினை செயல்படுத்தி நமக்கு தேவையான 7 டிஎம்சி தண்ணீரை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்னை நார் தொழில்:
தென்னை நாரிலிருந்து உருவாக்கப்படும் மதிப்புக் கூட்டுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்போம். இந்த பொருட்களுக்கான ஏற்றுமதி தர விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு தென்னை நார் மதிப்புக் கூட்டு பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும்.
பாரம்பரிய விவசாயம்:
ஒரு காலத்தில் கோவையில் அதிகம் பயிரிடப்பட்ட அதிகமாக நீர் பயன்படுத்தாத கொள்ளு மற்றும் நாட்டு ரக சோளம் ஆகியவற்றை மீண்டும் பயிரிட ஊக்குவிக்கப்படும்.
விவசாய ஏற்றுமதி மையம்:
விவசாய விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.
இயற்கை உரம்:
இயற்கை உரத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய அரசின் மானியம் வழங்கப்படும்.
தொழில் மற்றும் வர்த்தகம்:
தொழில் முனைவோர்களுக்கு
சிறுதொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல்கள் போன்ற உதவிகளை வழங்கும் வகையில் தொழில் முனைவோர் வசதி மையங்கள் அமைக்கப்படும். சிறு தொழில்களுக்கு பலனளிக்கும் வகையில் கோவை அரசூரில் எம்எஸ்இ தொழில்நுட்ப மையம் விரைவில் அமைக்கப்படும்.
தங்க நகை பட்டறை:
20 ஆண்டுகளுக்கு முன்பு தங்க நகை தயாரிப்பில் இந்தியாவின் முதன்மை நகரமாக இருந்த கோவை தற்போது பொலிவிழந்து நிற்கிறது. இதனை மீட்டெடுக்கும் விதமாக மத்திய அரசின் உதவியுடன் கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.