குறுக்கு வழியில் வெற்றி பெற, பா.ஜ.க., ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுக அரசு நீக்கியுள்ளதாக, தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் திருவிழாவின் முதல் கட்டம், ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் நடந்து முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தேர்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள் தான். ஏனெனில் தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக கட்டமைப்பு இல்லை.  அது உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறு குழு மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்த்தல், இறுதிப்பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு என தேர்தலை நடத்தி முடிப்பது தமிழக அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் தான். மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.

தமிழக அரசு அதிகாரிகள் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுக்க முழுக்க திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். நியாயமாக நடக்கும் அதிகாரிகளை தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறோம் என்று திமுகவினர் அன்பாக மிரட்டியும் உள்ளனர்.

கோவை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்களாக திமுக நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் நடைபெற்ற குளறுபடியில் இருந்தே இதை நன்கு உணர முடிகிறது.

திமுகவினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள், மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் தென் சென்னை,, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடும் திருப்பூர், பாஜக மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ் போட்டியிடும் வடசென்னை, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் போட்டியிடும் மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

திமுகவினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான திருட்டுத்தனத்தை, அயோக்கியத்தனத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார்.

எங்கெங்கெல்லாம் கொத்துக்கொத்தாக கடைசி நேரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்தின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தேர்தலை நேர்மையான முறையில் எதிர்கொள்வார்கள். ஆனால், மக்களின் மீது நம்பிக்கை அற்றவர்கள்தான் குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பார்கள். அதைத்தான் திமுக செய்திருக்கிறது. அதனால்தான் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ள தொகுதிகளில் கடைசி நேரத்தில் திருட்டுத்தனமாக, வாக்காளர்களை கொத்துக்கொத்தாக நீக்கி இருக்கிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற அராஜகம் நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top