2024 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த பத்மா சுப்ரமணியனுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நேற்று (ஏப்ரல் 22) 2024 பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ சாதனைகள் / சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது.
விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் நேற்று (ஏப்ரல் 22) நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்ளிட்டோரும் பத்ம விருது பெற்றனர். பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன.