நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என கூறிய மூதாட்டியை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் ஆர்மூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்று ஜீவன் ரெட்டி வாக்கு கேட்டார்.
அப்போது ஒரு பெண்ணிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தேன் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்றார்.
இதனை கேட்டதும் ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் அவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.