பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் இன்று (மே 06) பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நேற்று நான் அயோத்தியில் இருந்தேன். ராமரை தரிசனம் செய்தேன். ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். ஜூன் 4ம் தேதி பிஜூ ஜனதா தளம் அரசு காலாவதியாகப் போகிறது. அன்று நாங்கள் பா.ஜ.க., சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். ஜூன் 10ம் தேதி பா.ஜ.க., முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
ஒடிசாவில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைய போகிறது. பா.ஜ.க., ஆட்சியில் ஒடிசா மாநிலத்திற்கு பட்ஜெட்டில் குறைவான பணம் ஒதுக்கியது இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக சோனியாவின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி இருந்த போது, குறைவாக பணம் தான் ஒதுக்கி உள்ளது. இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான சுகாதார வசதிகள், சுற்றுலா மேம்பாடு என பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை பா.ஜ.க., அளித்துள்ளது. பா.ஜ.க., சொல்வதை நிறைவேற்றுகிறது.
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., அரசு உறுதியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருக்கு நாட்டின் மிக உயரிய பதவியை வழங்கிய பெருமை பா.ஜ.க.,வுக்கு தான். ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசாவிற்கு என்னால் முடிந்த அளவு செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.