கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவ, மாணவிகள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த 12 மாணவர்கள் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்க கடந்த 5ம் தேதி வருகை புரிந்துள்ளனர். அதன் பின்னர் நேற்று கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் 12 மாணவ, மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி 5 மாணவ, மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் உயிரிழப்பு குறித்து பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவ, மாணவிகள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. பொது இடமான கடற்கரையில் 12 பேர் குளிக்க சென்றதை யாரும் பார்க்கவில்லையா? எச்சரிக்கை பலகைகள் இல்லையா? காவல் துறையின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதா? கடலுக்குள் செல்பவர்களை தடுக்க உள்ளூர் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம் 12 பயிற்சி மாணவர்களுக்கும் முறையான விடுப்பு அளித்ததா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேவை!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.