காங்கிரஸின் ஓவர்சீஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் நிறவெறிப் பேச்சுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஓவர்சீஸ் தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். அமெரிக்காவில் இருப்பதை போன்று இந்தியாவில் வாரிசு சொத்துரிமை கொண்டு வரப்படும் என பேசினார். இவரது பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மீண்டும் சாம் பிட்ரோடா இந்தியர்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கே உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றம் அளிக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில், சாம் பிட்ரோடா பேச்சு குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தலைவர் அண்ணாமலை, ‘‘இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் நாடு என்றும் இந்தியாவிற்கென்று தனித்துவம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக, இதுதான் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் சந்ததியினர் மற்றும் வழிகாட்டிகளின் சிந்தனையும் செயல்முறையுமாகும்.
அமெரிக்காவில் அமர்ந்திருக்கும் வழிகாட்டியைக் கொண்ட ஒரு கட்சியில் இருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாலும், முட்டாள்களின் சாம்பியனாலும் நடத்தப்படும் கட்சி காங்கிரஸ்.’’ என காட்டமாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மேலும் மற்றொரு பதிவில், தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை, “அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன் (இந்தியன்)” என #ProudBharatiya எனும் ஹேஷ் டேக் உடன் பதிவிட்டுள்ளார்.