பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க, இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கமானது, இம்மியளவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை என மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே 09) நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு வெடிவிபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள, செங்கமலப்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்டிருக்கும் வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையுறச் செய்கிறது. மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
மேலும், இதுபோன்று பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க, இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கமானது, இம்மியளவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாமர மக்கள், பட்டாசு தயாரிக்கும் தொழிலை மூலதனமாக கொண்டு பணியாற்றி வரும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளை இனிமேலாவது இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி..!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.