வடலூரில் சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது? உயர்நீதிமன்றம் கேள்வி!

வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது? என திமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடலூர் மாவட்டம் வடலூரில், திறந்தவெளி இடமாக உள்ள பெருவெளியில் இருந்து, ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொள்வர். இந்த இடத்தில், 100 கோடி ரூபாயில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

‘சர்வதேச மையத்தை அரசு நிலத்தில் கட்டலாம். பெருவெளியில் கட்டக்கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தமிழக பா.ஜ.க.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதேபோல, தமிழ்வேங்கை உள்ளிட்ட பலரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று (மே 10) விசாரணைக்கு வந்தன.

அப்போது வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைந்தால் அவரின் தத்துவங்கள், கொள்கைகள் உலகம் முழுதும் எடுத்து செல்லப்படுமே; அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே, அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று, நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 1867 – 1872ம் ஆண்டுகளில், 106 ஏக்கரில் கட்டப்பட்ட சத்திய ஞான சபை, அப்படியே இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் விருப்பம்.

பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்வது, அவரின் விருப்பத்துக்கு முரணானது என, ஆறாம் திருமுறை, உத்திர ஞான சிதம்பர மான்மியம் உள்ளிட்ட பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
பெருவெளியில் புராதன சின்னங்கள் இருப்பதாக, தொல்லியல் துறை அறிக்கை கூறுவதால் அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது என, வாதிடப்பட்டது.

அரசு சார்பில் வாதாடிய வக்கீல், தொல்லியல் துறை ஆய்வில் சில கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அவை 100 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தைச் சேர்ந்தவை; தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல, என்றார்.

அப்போது, சத்திய ஞான சபையில், ஏற்கனவே உள்ள கட்டடங்களை பராமரிப்பதில் மெத்தனம் ஏன்; அங்கு எப்படி ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது; ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச மையம் கட்ட திட்ட அனுமதி பெறப்பட்டதா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு சார்பில்; சட்டப்பூர்வ அனுமதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்றபின், வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் துவக்கப்படும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வள்ளலார் சர்வதேச மையத்துக்கு சட்டப்பூர்வமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனைத்து ஒப்புதலை பெற்றபின் கட்டுமானத்தை தொடரலாம்.

சத்திய ஞான சபைக்கு சொந்தமாக, மொத்தமுள்ள 106 ஏக்கரில் தற்போது 71 ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதமுள்ளவற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

சத்திய ஞான சபைக்கு, அறங்காவலர் நியமிப்பது தொடர்பான நடவடிக்கையை, ஜூன் 24க்குள் முடிக்க வேண்டும். விசாரணை ஜூன் 24க்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top