கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு பிறகு முதல் கட்டமாக 300 பேருக்கு சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், ஜெயின் உள்ளிட்ட பிற மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அந்த நாட்டில் மதரீதியிலான பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக வசித்து வருபவர்களுக்கு , இந்தியாவில் குடியுரிமை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக மத்திய அரசு சார்பில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டியது. அதன்படி இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு சபைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. பிறகு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றப்பட்டு சிஏஏ சட்டம் கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த குடியரிமை திருத்தம் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைபவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. அதன்படி அந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்யும்.
இவர்கள் இந்தியா வந்த பிறகு 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். மேலும் 2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவில் குடியேறியவர்கள் விண்ணப்பம் செய்து இந்திய குடியுரிமை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் மத்திய அரசிடம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதில் முதற்கட்டமாக குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 300 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சீக்கியர்கள், ஹிந்துக்கள் என 14 பேருக்கான குடியுரிமை ஆணையை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.
சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் எங்களை மீறி சிஏஏ அமல்படுத்த முடியாது என்று பேசிக்கொண்டிருந்தனர். அதில் மம்தா பானர்ஜி, ஸ்டாலின், பினராயி விஜயன் உள்ளிட்டோர் அடங்குவர். ஆனால் மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதை இப்போதாவது அந்த முதல்வர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம்.