கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அங்குள்ள தூதரகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 13 அன்று கிர்கிஸ்தானிய மாணவர்கள்மற்றும் எகிப்திய மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோக்கள் வெள்ளிக்கிழமை இணையத்தில் வைரலானது. அதோடு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கும், பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களின் விடுதிகளை சில கும்பல் குறிவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு அதிகரித்தது. இந்த தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் மாணவர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் சில பதிவுகள் கூறினாலும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில் கிர்கிஸ்தானில் உள்ள தங்களது குடிமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், “நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண் 0555710041 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான எக்ஸ் வலைத்தளப்பதிவில், “பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கண்காணித்து வருகிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.