தேர்தலில் தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம்சாட்டுகின்றனர் என, கல்லூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா சட்ட கல்லூரி வளாகத்தில், அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, அவர் பேசியதாவது:
உலகளவில் இந்தியா, பெரிய பொருளாதார நாடாக வேண்டும் என்ற கனவு நிறைவடைய, தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். சமூக நீதி குறித்த செய்திகள், தினமும் நாளிதழ்களில் வருகின்றன. ஒரு சமுதாயத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் அருவருக்கத்தக்க செயலை சிலர் செய்தனர். மொழியால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது.
சுதந்திரத்திற்கு முன், நம் நாட்டின் கலாசாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர். தற்போது, புதிய பாரதம் உருவாகி வருகிறது. சமூக நீதியானது, குறிப்பிட்ட இயக்கம் மற்றும் அரசியல் கட்சிக்கு மட்டும் சொந்தமில்லை. அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. தீண்டாமை மிகவும் ஆபத்தானது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ம் தேதி, தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.