பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் இன்று (டிசம்பர் 05) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி 288 தொகுதிகளில் 230 இடங்களை கைப்பற்றியது. பாஜக 132 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களை பிடித்தன.
புதிய அரசு பதவியேற்பு விழா இன்று (5ம் தேதி) நடக்கும் என பாஜக தலைமை அறிவித்தது. முன்னதாக, நேற்று (டிசம்பர் 04) பாஜக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது சட்டசபைக்கான பாஜக தலைவராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று, ஆளுநர் சி.பி.ரதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பேரில், நாளை(5.12.2024) மாலை 5:30 மணிக்கு பதவிப்பிரமாணம் நடக்கும் என ஆளுநர் அறிவித்தார்.
இதன்படி, இன்று மாலை நடந்த விழாவில் முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.