ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் தமிழக பாஜக குழுவினர் இன்று (டிசம்பர் 10) டெல்லியில் சந்தித்தனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து உதவிகள் அளிப்பதற்காக, நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவினரோடு இணைந்து, மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மா அவர்களை, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பாதிக்கப்பட்ட சுமார் 69 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான பேரிடர் நிவாரண உதவிகள் வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினோம்.
நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், மற்றும் கார்த்தியாயினி அவர்கள், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் அவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர் வரதராஜன் அவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.