‘‘அர்ப்பணிப்புடன் தயாராகும் ஒவ்வொருவரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும்,’’ என்று, சென்னையில் தினமலர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை அறிவுறுத்தினார்.
தினமலர் நாளிதழ், வாஜிராம் அண்ட் ரவி பயிற்சி நிறுவனம் சார்பில், ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது.
வாஜிராம் அண்ட் ரவி பயிற்சி நிறுவன இயக்குநர் ரவீந்திரன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அண்ணாமலை, ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘அரசு பணி சாத்தியமே’ என்ற தலைப்பில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: எதற்காக நீங்கள் அரசு பணிக்கு செல்லவேண்டும்? நீங்கள் அந்த பணிக்கு சென்ற பின்னர் எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உந்துதலாக கொள்ள வேண்டும்.
கடந்த 2020ல் இருந்து 2047 அல்லது 2050க்குள் உலகத்தில் நடக்கக்கூடிய எல்லா மாற்றங்களுக்கும் மிக முக்கிய நாடாக இந்தியா இருக்கப்போகிறது. அந்த நேரத்திற்குள் நீங்கள் அரசுப் பணிக்குள் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் அனைத்து அதிகாரிகளும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு சவாலை கையில் எடுத்துக் கொண்டு செயலாற்றினர்.
ஒரு வளர்கின்ற நாடு, வளர்ந்த நாடாக இந்தியா மாறக்கூடிய தருணத்தில் நீங்கள் அதிகாரிகளாக மாற போக உள்ளீர்கள். உங்களுக்கு இது ஒரு பெரிய பாக்கியம். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும், ஒரு பெரிய படிப்பு படித்து அமெரிக்கா சென்று மேல்படிப்பு முடித்து இந்தியா திரும்பி வரவேண்டும், பெரிய நிறுவனத்தில் பணியில் சேரவேண்டும் என்று பலவிதமான பாதைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சிவில் சர்வீஸ். கடந்த 50, 60 ஆண்டுகளாக இதன் மீது மக்களுக்கு ஒரு மோகம், ஒரு காதல் இருக்கிறது.
இந்தியா ஒரு ஏழ்மை நாடாக, குறைந்த வருவாய் பெறுபவர்களின் நாடாக இருந்த போதும் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். ஏன் என்றால் இந்த கனவு ஒரு அழியாக்கனவாக இருக்கிறது.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு உயர்ரக வருவாய் பெறுபவர்களின் நாடாக மாறும் போதும் சிவில் சர்வீஸ் மேல் அனைவருக்கும் ஒரு மோகம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பரிணாமத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள்.
6 ஆண்டுகளில் மிக வேகமாக ஒவ்வொரு டிரில்லியன் டாலர்களாக பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறோம். உலகத்தில் வேகமான வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. அதற்கு காரணம் இங்கு ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்துள்ளது. ஒரு கட்சி அரசில் சக்தி மிக்கதாக இருக்கிறது. ஆகையால் பிரதமர் பதவியில் மாறி, மாறி பலரும் இருப்பதை பார்க்கவில்லை.
பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக 5 பிரதமர்கள் மாறி இருக்கின்றனர். அதிலும் 4 ஆண்டுகளில் 4 பேர் மாறி உள்ளனர். நமக்கு அதுபோன்ற பிரச்னை இல்லை, காரணம் இங்கு அடித்தளம் நன்றாக உள்ளது. எல்லா மாநிலங்களிலும் இன்றைக்கு கல்வி அறிவு அதிகம் உள்ளது. பெரும்பாலானவர்கள் கல்லூரிக்குச் செல்கின்றனர். இது ஒரு நல்ல அடையாளம். வாழ்க்கை மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் போடப்படும் மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடானது, நாட்டுக்கு தேவையான கட்டமைப்பான விமான நிலையம், துறைமுகம், சாலை வசதிக்கு ஒதுக்கப்படுகிறது. இதுவும் ஒரு நல்ல அடையாளமே. இந்த நாடு ஒரு வளர்ச்சி பாதையில் செல்வதை தெளிவாக பார்க்கின்றோம்.
அடுத்த 35, 40 ஆண்டுகளில் உங்களின் பணி வளர்ச்சியை நோக்கித்தான் இருக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்தியல் போர் எழும். அப்போது நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி இருக்கும்.
நான் ஒரு அரசியல் கட்சியில் இருந்தும், என்னை போன்று மற்ற கட்சிகளில் இருப்பவர்களும் ஒரு பார்வையை முன் வைப்பர். ஒரு சாதாரண மனிதராக அனைத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். நாளை நீங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் போதும் நாட்டின் அரசியலமைப்புடன் எந்த அளவுக்கு நீங்கள் ஒன்றி இருக்கிறீர்கள் என்பதை பற்றி எல்லாம் நீங்கள் இன்று ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறீர்கள்.
35 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளதை போன்று இல்லாமல், தற்போது அரசு அதிகாரியான பின்னரும், தொடர்ந்து உங்கள் திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் போன்றவை உங்களுக்கு தேவை. இதை எல்லாம் நீங்கள் பார்க்க போகிறீர்கள்.
இந்த நாடு வளரும் போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரியாக அல்லாமல் தனி நபராக, நிபுணத்துவம் பெற்றவராக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது தான் உங்கள் முன் உள்ள மிக பெரிய சவால். அதிகாரியாகும் போது விருப்பு, வெறுப்பின்றி நடந்து கொள்ள வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் தயாராக வேண்டும்; தோல்வி என்ற வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது. நான் தேர்வில் வெற்றி பெற்ற போதும், அதன் பின்னரும் நாடு முழுவதும் தேர்வாகும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளில் தமிழகத்தின் பங்கு எப்போதும் 10 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் தற்போது 4 முதல் 5 சதவீதமாக குறைந்துவிட்டது. அகில இந்திய அளவில் தேர்வானவர்களில் டாப் 10 ரேங்க் பட்டியலில் தமிழகத்தில் இருந்து வருவோரும் குறைந்து விட்டனர். இதற்கு என்ன காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் நெகட்டிவ் ஆக யோசிக்காமல் செயல்பட வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் போது எந்த பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு செல்லாதீர்கள். முழு கவனமும் தேர்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாடு உங்களால் வலிமை பெற வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.