இமய வீரர்கள் என்ற செல்லப் பெயர்கொண்ட இந்தோ – திபெத் எல்லைப் படையினர் இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும்போது எல்லை குறித்து கவலை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு அருகே உள்ள தேவனஹல்லி நகரில் இந்தோ – திபெத் எல்லை படைக்கான நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பேசிய அவர், இந்தோ – திபெத் எல்லை படை குறித்து தனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்திய – சீன எல்லை குறித்து தனக்கு கவலை இல்லை என்று தெரிவித்த அமித் ஷா, ஏனெனில் சீனாவை ஒட்டிய நமது எல்லையை பாதுகாப்பவர்கள் இந்தோ – திபெத் எல்லை படையினர் என்பதால்தான் என குறிப்பிட்டார். எனவே, இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் எவர் ஒருவரும் ஆக்கிரமித்துவிட முடியாது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தோ – திபெத் எல்லைப் படையினரை இமய வீரர்கள் என்ற செல்லப் பெயரில் மக்கள் அழைப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, இது பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைவிட மிகப் பெரியது என குறிப்பிட்டார்.