நாட்டில் உள்ள மிகவும் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல்
பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பெற்றுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ தகவலை, இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவு, தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளது. கண்ணாடிக் கூரையை உடைத்தல் என்ற தலைப்புடன் தொடங்கிய அந்த ட்விட்டர் பதிவில், இந்திய
ராணுவத்தின் ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ் கேப்டன் சிவா சவுகான், கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னர், குமார்
போஸ்ட்டில் ராணுவப் பணிக்காக அனுப்பப்படும் முதல் பெண் ஆவார் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் பகுதியில்
பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் பெற்றுள்ளார்.
மேலும், ராணுவத்தில் 244 பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து (செலக் ஷன் கிரேட்) முதல் முறையாக
விரைவில் வழங்கப்படவுள்ளது.
கேப்டன் சிவா சவுகான், கடல் மட்டத்திலிருந்து 15,632 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் சிகர உச்சியில்
பாதுகாப்புப் பணியில் இருப்பார். அவருக்கு பனிப்பாறையில் ஏறுதல், மிகவும் குளிர்நிலை பிரதேசத்தில் தன்னை
பாதுகாத்துக் கொள்ளுதல், பனிப்புயல் போன்ற பிரச்சினையை எதிர்கொள்ளுதல், உயிர்வாழும் பயிற்சிகள்
உள்ளிட்டவை வழங்கப்பட்டன” என்றார்.
கேப்டன் சிவா சவுகான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் பி.டெக் படித்த அவர், சென்னை ஆபீஸர்ஸ்
டிரெய்னிங் அகாடமியில் (ஓடிஏ) பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.