செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை !

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை கண்டித்து தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வருமாறு;-
“கடந்த ஜீன் 6ஆம் தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி
வரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு
கோரிக்கை விடுத்தனர். அப்போது, அரசு ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக
அவர்கள் வாழ்வாதாரம் கருதி செவிலியர்கள் மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று
அறிவித்தது,
இதனை ஏற்காத ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

  1. ஒப்பந்த செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை.
  2. இட ஒதுக்கீடு முறை ஏதும் பின்பற்றப்படவில்லை.
  3. மூன்று மாதம் கூட பணி செய்யாத செவிலியர்கள், பணி நிரந்தரம் கோரி போராடுகிறார்கள்.
    இவர்களை எவ்வாறு பணி நிரந்தரம் கோர முடியும் என்று உண்மையை மறைத்துப் பேசியுள்ளார். ஆதாரம்
    சுகாதரத்துறை செயலரின் அரசுக் கடிதம் எண்11358/ஆ1/2022-1தேதி 29.03.2022
    முதலில், பெருந்தொற்று காலத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகத் தொகுப்பூதிய அடிப்படையில், முறைப்படி
    மருத்துவப்பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம்
    செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மேலும், பெருந்தொற்று பரவிய காலத்தில், தடுப்பூசி செலுத்தும்
    பணியில், தங்கள் பாதுகாப்பையும், உயிரையும் பொருட்படுத்தாமல், தேச நலனுக்காக தொண்டுகள் புரிந்த
    தன்னலமற்ற செவிலியர்களின் உழைப்பினை உதாசீனப்படுத்தி அவர்களை வஞ்சித்து, அவர்களுக்கு தற்போது
    வேலையில்லை என்று பணிமுறிப்பு செய்து வெளியேற்றுவது, என்பது தமிழக அரசின் மக்கள் விரோத
    நடவடிக்கையாகும்.
    தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் கொரோனா
    நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் ஏறத்தாழ 5000 செவிலியர்கள் பெருந்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக முந்தைய
    அதிமுக அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இரவு-பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும்
    அரும்பணியில் அயராது ஈடுபட்டு வந்த செவிலியர்கள், அரசு உறுதியளித்தப்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய
    வேண்டிப் போராடி வந்தனர்.
    தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று
    உறுதியளித்து அதிகாரத்தை அடைந்த திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றும் பணிநிரந்தரம் செய்யாமல்
    ஏமாற்றியதோடு, தற்போது திடீரென அவர்களைப் பணிநீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது,
    தமிழ்நாட்டில் தற்போது மருத்துவமனைகளில் கடுமையான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவிவரும்
    சூழலில் நோயாளிகளை உரிய நேரத்தில் கவனிக்க முடியாத அவலநிலை நிலவுகிறது.
    மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்கத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை மாவட்ட சுகாதார இயக்கத்திற்கு
    மடை மாற்றி அவர்களைத் தந்திரமாக வெளியேற்றும் மோசடியை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பணி நீக்கம்
    செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு, உடனடியாக பணி நிரந்தரம், உறுதி செய்யப்பட வேண்டும்.
    தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 3,200 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், செவிலியர்களது
    மருத்துவச் சேவைக்குத் தேவையுள்ள நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும்
    முடிவைக் கைவிட்டு, அவர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக அரசை
    வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top