இந்து சமய அறநிலையத்துறையின் அத்துமீறல்களை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இந்துசமய அறநிலையத்துறை தேவையில்லாத ஆணி என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும், ஆன்மீக உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் அறநிலையத்துறையை கண்டித்தும் பாஜக ஆன்மீகப் பிரிவு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன்,கரு. நாகராஜன், வி.பி துரைசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.,
கூட்டத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, அறநிலையத்துறை ஒரு கருப்பு பெட்டி போல இயங்கி வருவதாகவும், அதன் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியவில்லை என்றும் சாடினார். அறநிலையத்துறை கோயில்களை நிர்வகிப்பதற்காக அதன் வருமானத்தில் 12 சதவீதத்தையும் நிர்வகிக்கும் குழுவை தணிக்கை செய்வதற்காக வருமானத்தில் 4 சதவீதத்தையும் எடுத்துக் கொள்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.இருந்தும் பக்தர்கள் கோவில் உண்டியலில் போடும் காசை எடுத்து அறநிலைத்துறை ஊழியர்கள் தங்கள் மனம் போன போக்கிற்க்கு செலவு செய்வதாக தரவுகளுடன் விளக்கினார்.
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்காக நடைபெற்ற ஒரு சந்திப்பில் பட்டர் முறுக்கு, டீ, காபி, மினி மீல்ஸ், ட்ரை குலோப் ஜாமுன் காரசேவு என அனைத்தும் கோவில் பணத்திலிருந்து எடுத்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட ஒரு அறிக்கையில், 1951 ம் ஆண்டு முதல் தற்போது வரை கோவில் பணத்திலிருந்து செலவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரம் பில்கள் தவறானது என்றும் இதன் மூலம் கோவில்களுக்கு 1032கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
கோவில் நிலங்கள் சூறையாடப்படுகின்றன என்றும் நகைகள் உருக்கப்படுகின்றன என்றும் காணிக்கை உண்டியல்கள் சுண்டப்படுகின்றன என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 5309 மாடுகள் காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆணி என்றும் தெரிவித்த அவர், பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.கோயில் நிலத்தில் இருக்கும் கட்டிடங்கள் தற்போதைய சந்தை மதிப்பை விட 10 மடங்கு குறைவான வாடகைக்கு விடப்படுவதாக தெரிவித்த அவர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது சொந்த கட்டிடங்களை இவ்வாறு குறைந்த வாடகைக்கு அளிப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.