இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., சிங்கப்பூரின் இதேபோன்ற தளமான ‘பேநவ்’
உடன் இணைந்து, விரைவில் செயல்படவிருக்கிறது.
கோல்கட்டாவில் நடைபெற்ற ‘ஜி20’ கூட்டத்தில் பங்கேற்ற, சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்ப
அதிகாரி சொப்னெந்து மொஹந்தி, இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம்
மற்றும் சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை, ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். இது தொடர்பாக, அவர்
மேலும் கூறியதாவது: இந்தியாவின் யு.பி.ஐ., சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை ஒருங்கிணைந்து, வெகு விரைவில்
தங்களுடைய செயல்பாடுகளை துவங்க உள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாகவும், மிகக் குறைந்த கட்டணத்திலும், மொபைல் போன்
வழியாகவே, வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இந்த தளங்களை பயன்படுத்தும்
போது, பணம் அனுப்பும் செலவு, தற்போது இருப்பதிலிருந்து, கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு குறையும். இந்த
ஒருங்கிணைப்பு திட்டத்தினால், இந்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரில் பொருட்கள் வாங்கினால், யு.பி.ஐ., தளத்தை
பயன்படுத்தி, எளிதாக பணம் செலுத்தலாம். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பணப்பரி மாற்றங்கள்
எளிதாகும்” என அவர் கூறினார்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சம்பந்தமான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த, சிங்கப்பூருக்கு உதவும் வகையில்,
யு.பி.ஐ., தொழில்நுட்பங்கள் மற்றும் குறியீடுகளை இலவசமாக வழங்க, இந்தியா தயாராக இருப்பதாக, ரிசர்வ் வங்கி
மற்றும் வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் துவக்கப்பட்ட, தேசிய பணம் செலுத்தும் நிறுவனமான என்.பி. சி.ஐ.,
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான திலீப் அஸ்பே தெரிவித்தார்.
உலக அளவில் இந்தியாவின் யு.பி. ஐ பிரபலமாகி வருகிறது. தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா எல்லா நாடுகளுக்கும்
முன்னோடியாக முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.