திமுகவை திக்குமுக்காடவைக்கிறாரார் பாஜகவின் இளம் வயது ஆளுமைமிக்க அண்ணாமலை.விரல் நுனியில் புள்ளி
விவரங்களுடன் தரவுகளை தந்து ஆளும் கட்சியின் இயலாமையை, பத்திரையாளர்கள் வாயிலாக மக்கள் மன்றத்திற்கு
முன் திமுகவின் போலி முகத்தை நாள்தோறும் தோலுருக்கிறார். அந்தவகையில் திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா
கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பாஜக மாநிலத்
தலைவர் அண்ணாமலை நேற்று (11.01.2023) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி :
நமது பண்பாட்டைப் போற்றும், பாதுகாக்கும் விதமாக 1,250 ஒன்றியங்களில் மக்களுடன் இணைந்து பாஜக
தொண்டர்கள் ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே வேள்விகளும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதுரையில் கோமாதா பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில்
ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.
திமுக ,காங்கிரஸ் சேர்ந்து குட்டிச் சுவராக்கிய ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தைப் பாதுகாக்க நமது பிரதமர் தொடர்ந்து
பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது கூட உச்ச நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்கில் நமது மத்திய அரசு
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசின் அட்டார்னி ஜெனெரல் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில்’ ஜல்லிக் கட்டு
என்பது தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாட்டுடன் தொடர்பு கொண்டது என்றும், இதில் காளை மாடுகள்
எந்தத் துன்பத்துக்கும் உள்ளாக்கப்படுவதில்லை ‘என்றும் கூறப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை
எனக்கும் எங்களது கட்சிக்கும் உள்ளது.
தமிழகம், தமிழ்நாடு என்ற விவகாரம் தொடர்பாக அரசாணை வெளியிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. நான்
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் தமிழகம் ,தமிழ்நாடு என்ற இரண்டும் ஒன்றே. தமிழர் கலாச்சாரம் மிகவும் உயர்ந்தது.
3,600 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு உயர்ந்த கலாசாரம் இருந்தது தெரிகிறது. நான் தமிழகம் , தமிழ் நாடு என்ற
பெயர்களைப் பல இடங்களில் உபயோகிக்கிறேன், முதலமைச்சரும் அவ்வாறே செய்துள்ளார். ஆளுநர் அவர்கள் தனது
ட்வீட்டில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதை அரசியல் காரணங்களுக்காக திமுக பெரிது படுத்துகிறது.
நமது ஆளுநர் பீகாரில் பிறந்து இந்தியக் காவல்துறையில் நேர்த்தியாகப் பணி புரிந்து வேறு மாநிலங்களில்
ஆளுநராக இருந்து விட்டு இங்கு வந்துள்ளார். ஒன்றைக் கவனியுங்கள். இதுவரை யாராவது கவர்னர் தமிழைக் கற்க
வேண்டும் என்று முயற்சி செய்துள்ளாரா? இவர் செய்திருக்கிறார். சட்ட மன்ற உரையில் கூட தமிழில் பேசிவிட்டுத்தான்
ஆங்கில உரையைப் படித்தார். ஆகவே திமுக தேவை இல்லாமல் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.
ஆளுநர் மரபை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பற்றி ஆளுநர் தனது உரையில் எங்காவது தனது சொந்தக் கருத்தைப்
புகுத்தியுள்ளாரா? ஒரே ஒரு இடத்தில் ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையைப் பிரயோகித்துள்ளார்.இலங்கைக்
கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீட்டு வந்துள்ளனர்.
ஆனால் உண்மை என்னவெனில் அயலுறவுத் துறை சம்மந்தப்பட்டுள்ளதால் இதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும்
இல்லை.
சொல்லப்போனால் பல இடங்களில் திமுக அரசின் புகழ் பாடும் உரையை ஆளுநர் அப்படியே படித்துள்ளார். ஒன்றைக்
கவனியுங்கள். சென்ற முறை ஆளுநர் உரையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தோம். திமுக
கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கிறார் என்று கூறினோம். திமுகவின் புகழப் பாடுவதற்கு ஆளுநர் இல்லை
‘என்றோம்.
திமுகவின் பிரச்னை ‘நாங்கள் கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கவில்லை ‘என்பது எங்களது குறை ‘அப்படியே
படித்தார்’ என்பது. ஆகவே அண்ணாமலை மாற்றிப் பேசுகிறான் என்று சொல்ல முடியாது.
தமிழகம் அமைதிப் பூங்கா என்கிறார்கள் . அது உண்மையா? இல்லையே . சமீபத்தில் கோயம்புத்தூரில் தற்கொலைப்
படைத்தாக்குதலுக்கான திட்டத்துக்காக நடந்த முயற்சியில் சிலிண்டர் வெடித்தது .சில நாட்களுக்கு முன்பு பெண்
காவலரிடம் மீது சில திமுகவினர் சில்மிஷம் செய்துள்ளனர்.
அந்நிய நேரடி முதலீடு தமிழ் நாட்டுக்குத்தான் அதிக அளவில் வந்தது என்று உள்ளது. ஆனால் உண்மை என்ன?
கர்நாடகாவுக்கு 2021-~22 ல் 18 பில்லியன் டாலர் வந்துள்ளது தமிழ்நாட்டுக்கு 5 பில்லியன் டாலர்தான். அது
தவறுதானே?.
இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டதற்கு தமிழக அரசு மட்டுமே காரணம் என்று
உள்ளது. ஆனால் இதில் திமுக அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை .அதை ஆளுநர் அப்படியே படித்தால் தவறாகும்
.அவரும் குற்றம் சாட்டப்பட்டவராவார்.ஆகவே அவர் படிக்கவில்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய பொய்கள்? அதை
ஆளுநர் அப்படியே படிக்கலாமா?
கொடுப்பதை ஆளுநர் அப்படியே படிக்க வேண்டும் என்பது மரபுதான் ஆனால் தகவல்கள் உண்மையா என்று
பரிசீலித்துக் கொடுங்கள்.என்பதே எங்களது வேண்டுகோள். எனக்கும் இந்த விஷயத்தில் சொந்தக் கருத்து உள்ளது
‘திமுக அரசு கொடுக்கும் அறிக்கையை ஆளுநர் அப்படியே படிக்கக் கூடாது’ என்பது எனது தனிப்பட்ட கருத்து
மட்டுமல்ல, கட்சியின் கருத்தும் கூட.
‘ஒன்றியம் ‘என்ற வார்த்தை பற்றி ஆளுநர் கூறிய கருத்து
இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஒரு பயிற்சி
நடந்தது. அதில் ஆளுநர் சில கருத்துகளைப் பேசியுள்ளார். நானும் இந்தியக் காவல்துறைப் பணியில்
இருந்திருக்கிறேன்.எங்களுக்கு வேலை கொடுப்பது மத்திய அரசு. மக்களின் வரிப்பணத்திலிருந்து மாநில அரசு
சம்பளம் தருகிறது.
ஒரே மாநிலத்தின் பணியில் தொடர்ந்து இருப்பதற்கே அவர்கள் (State Cadre) அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சில
சமயங்களில் அவர்கள் மத்திய அரசுக்கு தாற்காலிக முறையில் செல்லலாம் (Deputation) சில சமயங்களில் மத்திய
அரசுக்கும் மாநில அரசுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. மேற்கு வங்காளத்தில் தலைமைச் செயலர் தொடர்பான நிகழ்வு
அதற்கு உதாரணமாகும். மாநில அரசின் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இல்லையென்றால் அரசு நடத்த முடியாது.
என்னதான் ஒரு அரசியல்வாதியாக நான் திமுக அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்தாலும் கூட அது மக்களால்
தேந்தெடுக்கப்பட்ட அரசு. அரசியல் சாசனத்தை மீறியிருந்தாலொழிய மாநில அரசின் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த
ஒரு ஐஏஎஸ் அதிகாரியோ மற்ற அதிகாரியோ மறுக்க முடியாது. நானும் ஒரு அரசு அதிகாரியாக இருந்துள்ளேன். இது
ஒரு சூட்சமமான விஷயம். இந்த விஷயத்துக்குள் போக நான் விரும்பவில்லை.
ஏனென்றால் நமது நாடு ஒரு கூட்டாட்சி அடிப்படையில் உள்ள நாடு. மத்திய அரசும் மாநில அரசும் ஒரு வண்டியின்
இரண்டு சக்கரங்கள் போல .இரண்டு சக்கரங்களும் ஒருமித்து மிதமான வேகத்தில் சென்றால்தான் வண்டி
ஒழுங்காகப்போகும். ஆகவேதான் மத்திய அரசுப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு ஆளுநர்
அவர்கள் நல்ல அறிவுரை வழங்கியுள்ளார். ஆகவே நான் ‘நீங்கள் மத்திய , மாநில அரசுகளுடன் இயைந்து
செயல்படுங்கள் ‘என்று கூறுவேன்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்தது போல் மத்திய மாநில அரசுகளுக்கிடையே சச்சரவு தமிழ்நாட்டில் இல்லை. ஆகவே
அரசு அதிகாரிகளுக்குப் பிரச்னை இல்லை.ஆளுநர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்டேன். அங்கிருந்த
காங்கிரஸ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். பாஜக முதல்வர் எடியூரப்பாவின் ஒரு நாள் ஆட்சியில் அவரது
அரசுக்கு விசுவாசமாக இருந்தேன்.அதன் பிறகு இரண்டு வருட ஜேடிஎஸ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்தேன்..
நாங்கள் சொல்வது ‘ஸ்டாலின் அரசு சொன்னதைச் செய்யவில்லை . திட்டங்கள் முறைகேடாகச்
செயல்படுத்தப்படுகின்றன’ என்றுதான். என்னைப் பொறுத்தவரை ‘ஒன்றிய அரசு’ என்பது தவறான வார்த்தையாகும்.
இதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற உணர்வு இல்லை.
இன்று சபாநாயகர் அப்பாவு ‘ ஆளுநர் உரை தொடர்பான விவகாரத்தில் ஆளாளுக்கு கருத்து சொல்லக் கூடாது ;
ஆளுநருக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் ‘என்று கூறியுள்ளார். திமுக 1949ல் துவக்கப்பட்டது. கிட்டத்தட்ட 74
ஆண்டுகளாக அரசியலில் உள்ளது. முதிர்ச்சியுடன் நடக்க வேண்டும்.ஆளுநர் பற்றி அவர்களது தகவல் தொழில் நுட்ப
வலைத்தளத்தில் எதையாவது எழுதுவோம். அவருக்கு ஒரு பட்டப்பெயர் கொடுப்போம். என்றெல்லாம் செயல்படக்
கூடாது.
ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் உள்ள பிரனைகள் என்ன? ‘நாங்கள் அனுப்பிய மசோதாக்களில் அவர்
கையெத்திடவில்லை ‘என்பதுதானே? 2021ல் அரசு அனுப்பிய 25 மசோதாக்கள் அனைத்திலும் அவர்
கையெழுத்திட்டுவிட்டார்.
2022ல் அனுப்பியவற்றில் 15 மசோதாக்களில் கையெழுத்திடவில்லை அவை என்னென்ன? அதில் 12 மசோதாக்கள்
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதல்மைச்சரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையைக்
கொண்டவைதான். இப்போது ஆளுநர்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். இந்த மசோதா 1956 யுஜிசி
சட்டத்துக்குப் புறம்பானது. சமீபத்திய உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ஆகவே ஆளுநர் கையெழுத்திடவில்லை.
ஆக 15 மசோதாக்களில் 12 ஒரே விஷயம் தொடர்பானவை என்ற நிலையில் ஏதோ வெவ்வேறு விஷயங்கள்
தொடர்பானவை போல் காட்டி 15 மசோதாக்கள் ,15 மசோதாக்கள் என்று திமுக தவறாகச் சித்தரிக்கிறது. உண்மை
என்னவெனில் 12 பல்கலைக் கழகங்களுக்கு 12 சோதாதாக்கள் !
அடுத்து கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைப் பணி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அரசு
அதிகாரிகளுக்கு அளிக்கும் மசோதா. அதில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை.’மக்களாட்சியில் இது சிறந்த முறை
கிடையாது ‘என்கிறார் ஆளுநர். இப்போது உள்ள நடைமுறை என்னவென்றால் ஒரு சங்கத்தில் பிரச்னை இருந்தால்
ஒரு அதிகாரி இரண்டு மாதங்களில் விசாரணை செய்து கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அணுப்ப
வேண்டும். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
திமுக அரசு கொண்டு வந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு சங்க இரண்டாவது திருத்த சட்டம் 2022’ அமலுக்கு வந்தால்
40, 000 பேர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களுக்கு 40,000
உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவின் நோக்கமே இவர்கள் 40,000 பேர்களையும் எதையாவது சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிதாகத்
தேர்தல் நடத்தி திமுக ஆட்களை உள்ளே புகுத்த வேண்டும் என்பது.
இது ஜனநாயக மாண்புக்கு எதிரானது.
12 மசோதாக்கள் யுஜிசி சட்டத்துக்கு எதிரான பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை. 13 ஆவது கூட்டுறவு சங்கங்கள்
தொடர்பானவை. நீதி மன்றத்துக்குப் போனாலுமே இது செல்லாதது என்று தீர்ப்பு வந்துவிடும். 14 ஆவது தமிழ்நாடு
தனியார் கல்லூரிகள் கட்டுப்பாடு திருத்தச் சட்டம். இதன்படி ஒரு தனியார் கல்லூரியில் ஒரு பிரச்னை ஏற்பட்டால்
மாநில அரசு அதை முழுமையாகக் கையகப்படுத்துவதற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இது நமது அரசியலமைப்புச்
கட்டத்துக்கு முரணானது. அடிப்படை உரிமைகளுக்கெதிரானது.நீங்களே நியாயமாகச் சொல்லுங்கள் ஜனநாயகத்தில்
இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? இவை 14 மசோதாக்களுமே இந்தியாவின் சட்டங்களுக்கு எதிரானவை,
ஆகவே கோர்ட்டுக்குப் போனாலும் செல்லுபடி ஆகாது.
2021ல் ஆளுநருக்கு மொத்தமாக வந்தது 25 மசோதாக்கள். அனைத்திலும் ஆளுநர் கையெழுத்திட்டுவிட்டார். 2022
டிசம்பர் 22 வரையில் 59 மசோதாக்கள் வந்துள்ளன.
அதில் 44 ல் கையெழுத்துப் போட்டுவிட்டார். மீதி 15ல் 12 பல்கலைக் கழகங்கள் தொடர்பானவை.இரண்டு கூட்டுறவுச்
சங்கங்கள் மற்றும் தனியார் கல்லூரி தொடர்பானவை.
15 ஆவது மசோதா ‘ஆன்லைன் ரம்மி’ தொடர்பானது.’ஆன்லைன் ரம்மி’ தடைசெய்யப்பட வேண்டும் என்பது
பாஜகவின் கருத்து. மக்களுக்கு இதனால் துன்பம் ஏற்படுகிறது.
ஆனால் தமிழக அரசு இயற்றியுள்ள மசோதாவில் வலைத்தள சிக்னல் தொடர்பான விஷயம் மத்திய அரசின் அதிகார
வரம்புக்குள் வருகிறது. மாநில அரசு ஷரத்து 33 ஐ உபயோகித்து ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய முயல்கிறது.
ஆகவே ‘இது உங்களது அதிகாரத்தில் வரவில்லை ‘என்று ஆளுநர் கூருகிறார். விளக்கம் கேட்கிறார்.
இது தொடர்பான அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டார். ஆனால் திமுக அரசு இதை அதிகாரப்பூர்வமாக
வெளியிடவில்லை. நாங்கள் இதைச் சுட்டிக் காட்டிய பிறகு அமைச்சர் ரகுபதி ஏதோ நொண்டிச் சாக்கு கூறி தங்களது
தவறை ஒப்புக் கொண்டார். ஆக 84 மசோதாக்களில் 69 ல் ஆளுநர் கையெழுத்திட்டு விட்டார். ஆகவே திமுகவினர்
பொய் சொல்லக் கூடாது. மக்களை முட்டாளாக்கக் கூடாது. ஒரு அமைச்சர் சொல்கிறார் அல்லவா ? ‘சும்மா அடிச்சி
விடு ,அடிச்சி விடு’ என்று ! அது போல் நடக்கக் கூடாது.
தங்களது வேலையை ஆளுநர் செய்கிறார் , தங்கள் வேலையைச் செய்ய விடாமல் தடுக்கிறார் ‘என்று திமுக பேசுவது
தவறு. திமுக ஐடி பிரிவில் ஆளுநரை ஆபாசமாக வருணிக்கிறார்கள்.
இதெல்லாம் காங்கிரஸ் ,திருமாவளவன், கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியுமா ? எந்த மசோதாவில் கையெழுத்துப்
போட்டார் எதில் போடவில்லை ஏன் போடவில்லை என்று தெரியுமா? ஆகவே நீங்கள் காங்கிரஸ் ,
திருமாவளவன்.கம்யுனிஸ்டுகளிடம் சென்று ‘அண்ணாமலை இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்வது
சரியா?’என்று கேட்க வேண்டும். நாளைக்கு இவர்களது கல்லூரிகளை அரசு கைப்பற்றினால் ‘ஐயோ, இந்த விடியா
அரசு இப்படிச் செய்கிறதே’ என்று சொல்ல மாட்டார்களா?
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் தொடர்பான விஷயம் பற்றி….
மாநில அரசு ஒரு உலக மகா தகிடுதத்தம் செய்துள்ளது. நாங்கள் அறிக்கை கொடுத்த பின் ஒரு அரசாணை
வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியில் இணைந்த செவிலியரை நீங்கள் பதினோரு மாதங்கள் பணி
செய்து ஒரு நாள் ‘பிரேக்’ எடுத்து மீண்டும் பதினோரு மாதங்கள் பணிசெய்யுங்கள் ‘ என்று அந்த அரசாணையில்
உள்ளது. அது நிரந்தரப் பணிக்கான ஆணை அல்ல. தாற்காலிகப் பணிக்கான ஆணையே .ஆனால் மருத்துவத் துறை
அமைச்சர் மா சுப்பிரமணியன் ‘நாங்கள் அரசாணை வெளியிட்டுள்ளோம் என்கிறார். ஆனால் அது நிரந்தப் பணிக்கான
ஆணை அல்ல.ஆகவே ‘நீங்கள் பித்தலாட்டம் செய்துள்ளீர்கள்’ என்று நாங்கள் மீண்டும் அறிக்கை அளித்துள்ளோம்.
அடுத்த விஷயத்துக்கு வருவோம். ஏன் நிரந்தப் பணிக்கான ஆணை தரவில்லை என்பதற்கு மருத்துவச் சேவைப்
பணியாளர் வாரியம் (Medical Service Recruitment Board – MRB) இல் ஒதுக்கீடு (Quota) முறை பின்பற்றப்படவில்லை
என்பதே காரணம். அதற்கு’ நாங்கள் எம் ஆர் பி யில் தேர்வானோம். ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது.என்று
செவிலியர்கள் கூறுகின்றனர். 800 பேருக்குத்தான் பிரச்னை. மீதி 3,200 பேர்களைப் பொறுத்தவரை ஒதுக்கீடு முறை
பின்பற்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே எங்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்குங்கள்’ என்று
செவிலியர்கள் கூறியுள்ளனர். இதற்கு மாநில அரசு இன்னும் பதில் சொல்லவில்லை.’ நீங்கள் இப்பொது வரவில்லை
என்றால் எப்போதுமே தேர்வு எழுத முடியாது’என்று அச்சுறுத்தி தனியார் மருத்துவ மனைகளில் நல்ல ஊதியத்தில்
இருந்தவர்களை வரவழைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு செவிலியர்கள் நமது அலுவலகத்துக்கு வந்தனர். நாங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு
எழுதியுள்ளோம். இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மிகப் பெரிய போராட்டம் செய்வோம். ஒரு
பக்கம் மாநில அரசு பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்கிறது.செவிலியர் பணியிடங்களின்
எண்ணிக்கை 20,000 த்தை தாண்டும் என்றனர். எங்களது முழு ஆதரவு செவிலியருக்கு உண்டு.
பத்து வருடம் எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் உறுதி மொழிகளை அள்ளித் தெளித்தார். 507 தேர்தல்
வாக்குறுதிகள் தந்தார். மக்கள் இப்பொது துல்லியமாகத் தகவல்களை வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள்.
வீடியோ ஆதாரங்களைக் காண்பித்து ஸ்டாலின் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ‘இப்படிச் சொன்னார்’
என்று காட்டுகின்றனர்.
இவர்கள் ஏன் இம்மாதிரி நாடகம் ஆடுகிறார்கள் என்றால் இந்தச் செவிலியர்களைக் கழற்றி விட்டு மீண்டும் ஒரு
தேர்வு நடத்தினால் பணத்தை ஆட்டை போட முடியும் என்பதற்காகத்தான்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே திமுகவின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் நடந்து
கொண்ட முறை சரியா? ஆளுநரை உரை நிகழ்த்த அழைத்தது யார்? முதலமைச்சர். ஆனால் அவரது உரை
தொடங்குவதற்கு முன்னரே அவரைச் சூழ்ந்து கொண்டு விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் அவரை உரை நிகழ்த்தக்
கூடாது என்று தடுத்தனர். இதை சபாநாயகர் ரசித்துக் கொண்டிருந்தார். இன்று ஒரு காணொளியைப் பார்த்தேன் ராகுல்
காந்தி நாடாளுமன்றத்தில் மோடியைப் பார்த்துக் கண் சிமிட்டியது போல் ஒரு காட்சி இருந்தது, இது மிகவும் தவறாகும்
ஆளுநர் யாருக்கும் எதிரானவர் அல்ல. தமிழக மக்களுக்குப் பணி செய்ய ஆளுநர் வந்துள்ளார். அரசுடன் ஒத்துழைத்து
மக்களுக்காகப் பணி செய்வதே ஆளுநராது நோக்கம்.
முதலமைச்சர் பேசக் கூடாத நேரத்தில் பேசி ஆளுநருக்கு தர்ம சங்கடத்தை அளித்து அவரை வெளியேறச் செய்தனர்.
நீட் மசோதாவை ஆளுநர் அனுப்பி விட்டார்.இப்போது உச்ச நீதி மன்றத்துக்குச் செல்வார்களா? மாட்டர்கள் போனால்
‘அதுதான் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி விட்டோமே ‘என்று சொல்லும்.
ஆளுநர் பொங்கல் கொண்டாடுகிறார் என்பதை நினைத்து நான் நான் பெருமைப்படுகிறேன். முதலமைச்சர்
பெருந்தன்மையோடு நடக்க வேண்டும். முதல்வர் – ஆளுநருக்கிடையே சச்சரவு நடக்கக் கூடாது.
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் படுத்தப்படமாட்டாது என்று நிதி அமைச்சரே சொல்லி விட்டார். அது தொடர்பான
வாக்குறுதி நிறைவேற்ற முடியாதது என்று நாங்கள் ஆரம்பித்திலிருந்தே கூறி வருகிறோம். தேர்தலில் அரசு ஊழியர் –
ஆசிரியர் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) எனக்கெதிராக இவர் வந்தால் பழைய ஓய்வூதியம் வராது ‘என்று பிரச்சாரம்
செய்தனர்.
நமது கட்சியின் மாவட்டத் தலைவர் தனபால் அவர்கள் ஒரு ஒரு பெரிய ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். 2021
நவம்பர் 16 அன்று பேருந்து நிலையத்தில் 34 கடைகளை ஏலம் விட்டனர். ஏலத்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்காமல் 15
லட்சம் லஞ்சம் தந்தவர்களுக்கு அளித்தனர். அதற்கு எதிராகச் செயல்பட்டு 6 மாதங்கள் கடைகளைத் திறக்க விடாமல்
செய்து இப்பொது 2022 நவம்பர் 22 அன்று அந்த அதை செல்லாததாக்கி விட்டு இப்பொது புதியதாக ஏலம்
நடத்தியதாகப் பொய் சொல்லி யாருக்கோ கொடுத்துள்ளனர் .ஆகவே இந்த விபரீத விளையாட்டைக் கைவிட்டு
வெள்ளை அறிக்கையைப் பத்திரிகையாளர்களிடம் அளிக்க வேண்டும் என்று கேட்கிறேன் செய்யவில்லை என்றால்
பாஜக மிகப் பெரிய போராட்டம் நடத்தும் !..
அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்திலும் வீட்டுக்கு 10,000
லஞ்சம் வாங்குகின்றனர். பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்திலும் லஞ்சம். ஊழலில் தமிழகம் முதலிடத்தில்
உள்ளது.
தமிழகம் சட்ட ஒழுங்கில் அதல பாதாளத்தில் உள்ளது. இந்திய வரலற்றில் ஒரு அரசியல்வாதி கேட்ட கேள்விக்கு டிஜிபி
பதிலளித்தது முதல் முறையாக இங்கு நடந்தது. அதுவும் தப்பும் தகரமுமாக இருந்தது. திமுக அழுத்தம் கொடுத்து
அவரைப் பதிலளிக்க வைத்தனர்.
சட்டம் ஒழுங்கில் மிகவும் கேவலமான மாநிலம் தமிழகம். கீழிநிலையில் உள்ள காவல் நிலையங்களில் கட்சியினரின்
ஆதிக்கம் இருக்கக் கூடாது.
அஜித் , விஜய் துணிவு, வாரிசு படங்கள் குறித்து…
அஜித் அவர்களது உழைப்பு அசாதாரணமானது.ஒரு தனி மனிதன் திரைப்படத் துறையில் ஒரு பின்புலமும் இல்லாமல்
சாதனைசெய்வது பெரிய விஷயம். அஜித், விஜய் இருவரின் ரசிகர்கள் சண்டை போடக் கூடாது. இப்போதெல்லாம்
படம் பார்க்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவது குறித்து எந்த அதிகார பூர்வத்தகவலும் இல்லை. இந்தியாவின் 543
நாடாளுமன்றத் தொகுதி மக்களும் தங்கள் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டுமென்று விரும்புவர்.