பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரையிலான சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார்.
உலகின் மிக நீளமான பாதையில் பயணிக்கும் 3,200 கி.மீ தூரத்துக்கு பயணிக்கும் இந்த கப்பல் 51 நாட்கள் கங்கை நதியில் பயணித்து மார்ச் ஒன்றாம் தேதி அசாம் மாநிலம் திப்ரூகருக்கு செல்ல உள்ளது.
வாரணாசியில் நடைபெற்ற இத்திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, உலகின் நீளமான நதியான கங்கையில்,சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது ஒரு முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவின் சுற்றுலாவை மேலும் உயரத்துக்கு எடுத்து செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் சிறப்பை வார்த்தைகளால் உணர முடியாது என்றும், இதயப்பூர்வமாக அனுபவித்தே உணர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அருங்காட்சியகங்கள், தேசிய பூங்காக்கள், மலைத் தொடர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பெரிய நகரங்களான பீகார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்டின் ஷாகிப்கன்ஞ், மேற்குவங்கத்தின் கொல்கத்தா மற்றும் வங்க தேசத்தின் டாகா, அசாம் மாநிலத்தின் கெளகாத்தி வழியே பயணிக்க உள்ளது.
வாரணாசியில் இருந்து இன்று புறப்பட்டுள்ள இந்த பயணிகள் கப்பலானது, 3,200 கி.மீ 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ரூகரை அடைய உள்ளது.
கங்கை நதியின் பிரசித்தி பெற்ற ஆரத்தி, சாரநாத்தின் புத்த மடாலயங்கள், மஜ்லி தீவு, உள்ளிட்ட இடங்களில் கப்பல் நின்று புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன. காசிரங்கா தேசிய பூங்கா, சுந்தர்பன் சதுப்பு நிலக்காடுகளையும் கடந்து செல்ல உள்ளது
மொத்தம் 3 அடுக்குகளை கொண்ட இந்த கப்பல், 36 அறைகளை கொண்டுள்ளது. முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 பயணிகள் பயணிக்கின்றனர். இதற்காக அவர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
கங்கா விலாஸ் கப்பலின் அடுத்த பயணம் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது எனவும், இதற்காக முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்த்தின் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், புதிய வழித்தடங்களில் விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.