தமிழக ஆளுநர் பற்றி தரக்குறைவாக திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசிய ஆர்.எஸ்பாரதியை குண்டர் சட்டத்தில்
கைது செய்யவேண்டும் என்றும், அவர் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இருக்க வேண்டியவர் என்றும் தமிழக
பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வட
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘கொஞ்சம்
கண்ஜாடை காட்டியிருந்தால் கவர்னர் வீட்டுக்கு போயிருக்க முடியுமா?’ என்கிறார். அதாவது ஆளுநரை கொலை
செய்யக் கூட தயங்காது திமுக என்ற பொருள்பட பேசியிருக்கிறார். திமுகவின் அதிகாரத் திமிரை இது தெளிவாக
உணர்த்துகிறது.
ஜனநாயக நாட்டில் ரவுடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இருக்கும் கட்சியின்
தலைவர் சொன்னதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு இருப்பது வன்மையாக
கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தரக் குறைவாக பேசி வந்த ஆர்.எஸ்.பாரதியை அனைவருக்குமான முதல்வர் என்று
மார்தட்டி கொள்ளும் மு.க.ஸ்டாலின், தனக்கு சட்டம் – ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து
உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். “காவல்
நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இடம்பெற வேண்டிய இந்த நபர் ஒரு ஆறு மாதங்களாவது சிறையில் இருந்தால்
திருந்துவார்” என்று நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார்.