பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பொது இடங்களில் பெண்களை அவதூறாக பேசுவதை திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக இவர்கள் இடையே நீண்ட நாட்களாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிர் நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது ஏற்கனவே முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் விளைவாக சைதை சாதிக் மீது வழக்கு பதிந்து இருந்தாலும் கூட இன்னும் அவரை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்
சமீபத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தின் முன் ஆஜரான சைதை சாதிக் பொதுவெளியில் பெண்கள் அவதூறாக பேசியதற்காக எந்தவித நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மன்னிப்பு கேட்ட பிறகும் கூட சைகை சாதிக் அதேபோன்று கொச்சையாக பேசி வருவதாகவும். இது ஆளுங்கட்சியின் ஆணவப் போக்கையும் காவல்துறையின் கையாலாகாத தனத்தையும் வெளி காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண மக்கள் காவல்துறை நடுநிலைமையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், ஆனால் காவல்துறை கண்களை மூடிக்கொண்டு ஆளுங்கட்சியினர் செய்யும் அராஜகங்களை கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும் சாடியுள்ளார்
திமுகவின் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொதுக்கூட்டங்களில், தமிழ்நாடு ஆளுநர் பற்றி மிகவும் இழிவாக பேசி வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் இரண்டு திமுக நிர்வாகிகள், பெண் காவலர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாஜக மட்டுமே திமுக நிர்வாகிகளின் செயலை கடுமையாக எதிர்த்தது என்றும், அதன் பிறகே காவல்துறையினர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தனர் என்றும் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அந்தப் பெண் காவலர் புகாரை திரும்ப பெற நிர்பந்திக்கப்படுவதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் இழிவான பேச்சுகளை கேட்டுக்கொண்டு இனியும் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என தமிழக பாஜக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரை பற்றிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இழிவான பேச்சுக்களை ஜனநாயக உரிமை என கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இதே போன்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இழிவாக பேசினால் அப்போது தமிழ்நாடு காவல்துறை நிச்சயமாக அமைதியாக இருக்காது என்பதையும் விளக்கியுள்ளார்.
எனவே தமிழ்நாடு காவல்துறை பொது மேடைகளில் இது போன்ற இழிவான பேச்சுகளை பேசுவதை அனுமதிக்க கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது போன்ற அராஜகங்களை கண்டும் காணாதது போல் செயலற்று இருப்பது, அதனை ஊக்குவிப்பது போல் அமையும் என்பதை தமிழக காவல் துறைக்கு தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.