பாகிஸ்தான் அண்மைகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. உணவுக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையான எக்ஸ்பிரஸ் டிரைபூன் பிரதமர் மோடியையும் அவரின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் அடைந்து வரும் முக்கியத்துவத்தையும் புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாசாத் சவுத்ரி என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் திறம்பட கையாளப்படுவதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நிறுவனங்களின் முதலீடு செய்ய இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருப்பதாக புகழ்ந்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா ஒரு ஏக்கர் பரப்பளவில் அதிக அளவு பயிர்களை விளைவிப்பதாகவும், 1.4பில்லியன் மக்கள் தொகை இருந்தாலும் சீராகவும், ஒருங்கிணைப்புடனும் இந்தியா இயங்குவதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆட்சிமுறை பல்வேறு கால கட்டங்களில் எழுந்த பிரச்சனையை தாண்டி உறுதியாக நிற்பதாகவும், ஜனநாயகத்தின் கூறுகளுடன் இயங்கி தனது நிலைத்தன்மையை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தியாவை தனக்கு முன் இருந்தவர்களை விட மோடி அதிகமாக பிரபலப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா தான் விரும்பியதையும், தனக்கு தேவையானதையும் செய்வதற்கான திறத்துடன் இருப்பதாவும் புகழ்ந்துள்ளார்.