பா.ஜ.க வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம், பொருளாதாரத்தில் நாட்டை உலகின் 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு, இந்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள், டிஜிட்டல் உலகில் இந்தியா புரிந்து வரும் மகத்தான புரட்சி என குறிப்பிடத்தகுந்த விஷயங்களை சுட்டிக்காட்டி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய மற்றும் மூத்த பா.ஜ.க தலைவர்கள், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 350 பா.ஜ.க பிரமுகர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், இந்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு கருப்பொருளிலில் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த 2-வதுநாள் கூட்டத்தில் சமூக-பொருளாதாரம் சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் மிக மோசமான 5 நாடுகள் என்ற பட்டியலில் இருந்த இந்தியாவை, 5வது மிகப் பெரிய பொருளாதார நாடு என மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகத்தில் நிறைவு, அரசின் திட்டங்கள், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவையும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசிய செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்தது. நாட்டில் டிஜிட்டல் பணபரிமாற்ற சூழலை மேம்படுத்தியற்காகவும், உலகளாவிய டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதற்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக, நாட்டின் வரி வசூல் 22.6 சதவீதம் அதிகரித்துள்ளதும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன் மொழிந்ததாகவும், மத்திய அமைச்சர் முரளீதரன், ஹரியானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி., சுனிதா தக்கல் ஆகியோர் வழிமொழிந்ததாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தர்மேந்திர பிரதான் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை கேட்டு பாஜகவை எதிர்கட்சிகள் கேலி செய்து வந்தன. தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு அதை திறப்பதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தை அனைத்தும் உள்ளடங்கியதாகவும், தற்சார்புடையதாகவும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான முன்னேற்றம் என்பது வெறும் கோஷம் மட்டும் அல்ல. அது பா.ஜ.க வின் தத்துவம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரத்தில் மிக மோசமான 5 நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்தது. தற்போது, 75-ம் ஆண்டு சுதந்திரத்தை நாடு நிறைவு செய்யும்போது, அது இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக உள்ளது. ஏழைகளுக்கு இலவச ரேஷன், அனைவருக்கும் சொந்த வீடு, கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இலவச தடுப்பூசி செலுத்தியது ஆகியவையும் செயற்குழு தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், உலகளவிலான பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.6 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:
பாஜக தலைவர் நட்டா தலைமையில் கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியது மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. மேலும், அவரது தலைமையில் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியினை பாஜக பதிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் நட்டா தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, 2024 ஜூன் மாதம் வரை பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா தொடர்ந்து நீடிப்பார். இவர்களது சீரிய தலைமையில், 2019-ல் பெற்ற வெற்றியை காட்டிலும் 2024-ல் சிறப்பான வெற்றியை பாஜக பதிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த தேசிய செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பங்கேற்கும் ஒரு பிரம்மாண்ட பேரணிக்கு பா.ஜ.க வியக்கத்தக்க வகையில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.