நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 16ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி மாதம் 27ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்திலும் மேகலாயவிலும் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 60 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறை 33 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக மாணிக் சாகா உள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணியால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது.
இதேபோல மேகாலயாவிலும், திரிபுராவிலும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியால் கடந்த பல 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்த மாநிலங்கள், பாஜக ஆட்சியில் அடிப்படை கட்டமைப்புகள் தொடங்கி விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளன. பிரிவினைவாத இயக்கங்களின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளதுடன் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் வன்முறையை தூண்டுபவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த மாநிலங்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன.
இந்த ஆண்டு 9 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்கட்டமாக 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கர்நாடகா, மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.