பிரதமர் மோடி எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” நூலின் தமிழ் பதிப்பு வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) எனும் ஆங்கில நூலின் தமிழ் பதிப்பை சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ( 17.01.23) வெளியிட்டார்.

பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (Exam Warriors) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் தமிழாக்க நூல் வெளியீட்டு விழா, நேற்று (17.01.23) சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்தது.

நூலின் முதல் பிரதியை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, சென்னை‌ ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, கேந்திரிய வித்யாலயா சங்கதன், துணை ஆணையர் ருக்மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது ” பொதுத்தேர்வு எழுதுவதற்கு மட்டுமின்றி உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் இந்த புத்தகம் உதவிகரமாக இருக்கும் . பிரதமர் மோடி பல்வேறு கடினமான சூழல்களை கடந்து வந்துள்ளார். அவையே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல அவருக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது. அதன் விளைவாக நாடு தற்போது பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவின் எதிர்காலம் வருங்கால தலைமுறையான உங்கள் கைகளில்தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சியே நாட்டையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். தேர்வை கண்டு பயப்பட வேண்டியதில்லை. முறையாக திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். குழந்தைகள் வெற்றி பெறுவதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியமாகும். வாழ்வில் வெற்றி பெற நேர மேலாண்மை மிகவும் முக்கியமாகும்” என்றார்.

ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும் போது, ‘‘மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு குறித்த பயம் இருக்கும். அதை கடந்து செல்ல இந்த புத்தகம் உதவியாக இருக்கும். ஒரு தேர்வு உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வாய்ப்புகள் நமக்கு உள்ளன. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top