ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அங்கமாக இருந்த திமுகவின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரகசியமாக 400 மல்டிமீடியா ஹை ஸ்பீட் டெலிபோன் சேவையை வைத்திருந்தார் என்பதும், அதன்மூலம் மக்கள் பணம் சுமார் ரூ. 400 கோடி இழப்பு என்பதும் கண்டிறியப்பட்டு அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த முறையற்ற 400 டெலிபோன் சேவைகளின் மூலம் அவருடைய சகோதரர் நடத்திவரும் சன் டிவி குழுமமும் பயன் அடைந்தது என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த ஓராண்டாக சென்னையில் வங்க தேசத்து இஸ்லாமிய இளைஞர்கள், அசாம், மேற்கு வங்கத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் பலர் சென்னையில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து சிம்பாக்ஸ் மற்றும் சிம் கார்டுகளை வைத்து சட்ட விரோத டெலிபோன் எக்சேஞ்சுகளை நடத்தி வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், சென்னை பி.எஸ். என்.எல் மற்றும் தனியார் தொலைத் தொடர்பு அதிகாரிகள், தமிழக காவல் துறையினருடன் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இந்த 3 இடங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பை அவர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக சிம் கார்டுகளை பயன்படுத்தக் கூடிய 15 சிம்பாக்ஸ் பெட்டிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்டெல் சிம்கார்டுகள், தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குவதற்கான 12 கம்பியில்லா இணைப்புப் பெட்டிகள், போலி சிம்கார்டுகள் மற்றும் இதர உபகரணங்களை அந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக இந்த தொலைத்தொடர்பு அமைப்பை கட்டமைத்து இணைய வழி மூலம் சர்வதேச அளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இது போன்ற சர்வதேச அழைப்புகளால் உள்ளூர் தொலைபேசி சேவையை வழங்கும் முகவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து 1800 110 420 / 1963 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.