நாடு முழுவதும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிலையில் மூன்றாவது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் காணொலி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 71 ஆயிரம் பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தெலங்கானா, மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவருடன் பேசினர். அப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், நன்மைகள் மற்றும் தற்கால இளைஞர்களின் மனநிலை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். பிரதமருடன் பேசிய இளைஞர்கள், மத்திய அரசுப் பணி தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்
இதனிடையே பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதையும், தற்போது 71 ஆயிரம் வேலை வழங்கியுள்ளதையும் குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 71 ,000 ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் மத்திய அரசுப் பணியில் இன்று இணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.