கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுவில் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்பு மற்றும் காசி தமிழ் சங்கத்தை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு, சட்டம் ஒழுங்கை அதல பாதளத்துக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன …
ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டு …
ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு 2023 செப்டம்பரில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களில் ஜி-20 கூட்டமைப்பு கூட்டங்கள் நடைபெற்று சர்வதேச வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார பரிவர்த்தனை, சுற்றுலா மேம்பாடு போன்ற பல முக்கிய முடிவுகள் குறித்து கலந்தாய்வு நடைபெறும்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்ற உடன் ஆற்றிய உரையில், உலகம் ஒரு குடும்பம், உலக மக்கள் அனைவரும் ஒன்றுதான், அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்று அற்புதமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இதன்மூலம் அவரை பாரதப் பிரதமர் என்பதை தாண்டி உலகம் போற்றும் உத்தமத் தலைவர் என உலகத் தலைவர்கள் புகழ்வதாக பாஜக செயற்குழு பெருமிதம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உலகப் பிரச்சனைகளை தீர்க்கும் நாடாக இந்தியாவை உருவாக்கிய பிரதமர் மோடியை பாராட்டி பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
\
ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் நடைபெற்ற அராஜகத்துக்கு கண்டனம்
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின் போது ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் நடவடிக்கைகளை பாஜக செயற்குழு வன்மையாக கண்டித்து உள்ளது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற தன் கருத்தை ஆளுநர் ஒரு விழாவில் பேசிய நிலையில், அதனை திசை திருப்பி மொழி அரசியலை முன்னெடுத்து ஆளுநரை அவதூறு செய்ததையும் பாஜக செயற்குழு கண்டித்து உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தலைவிரித்தாலும் லஞ்ச லாவண்யம், பெருக்கெடுத்து ஓடும் ஊழல், நிர்வாக சீர்கேடு என கடந்த ஒன்றரை வருட சோதனையான ஆட்சியை மூடி மறைக்க தமிழகம் – தமிழ்நாடு என்ற விவகாரத்தை ஊதி பெரிதாக்கி மொழி ரீதியான பதற்றத்தை உருவாக்க முனைந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாஜக செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை பாதிக்காமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுக …
ராமர் பாலத்தை பாதிக்காமல் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும், இந்த உறுதிமொழியை அளித்துள்ளதையும் செயற்குழு சுட்டிக்காட்டி உள்ளது. எனவே முந்தைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த 4A சீரமைப்பு படி ராமர் பாலத்தை இடித்து சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என பாஜக செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் 4A சீர்திருத்தப்படி சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்றும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பீடு ஏற்படும் என்றும் செயற்குழு தெரிவித்துள்ளது.
காசி தமிழ் சங்கமம் தந்த தேசத்தந்தை பிரதமர் மோடிக்கு செயற்குழு பாராட்டு …
காசி தமிழ் சங்கமம் தந்த நம் தேசத்தந்தை பாரதப் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து பாஜக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி திருக்குறள் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் திருவள்ளுவர் புகழ் பாடப்படும் என்று அறிவித்ததையும் செயற்குழு நினைவு கூர்ந்துள்ளது. தேசிய கவி பாரதியார் பிறந்த செப்டம்பர் 11ம் தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தது, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் விடுதலைக் கவியின் பாடல்கள் கரகாட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை வரிசைப்படுத்தி பாரதம் ஒரே தேசம் என்ற உணர்வை ஊட்டியது உள்ளிட்ட காசி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வுகளையும் செயற்குழு பாராட்டியுள்ளது.
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற திருவிழாவான காசி தமிழ் சங்கமம், தலைமை ஆன்மிக பீடமான காசியில் நடந்தேறியதற்கும் அதற்கு முழுமுதல் காரண கர்த்தாவாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
புதுக்கோட்டை இறையூர் கொடுமைகளுக்கு கண்டனம் …
பகுத்தறிவு, சுயமரியாதை, சீர்திருத்தம் போன்றவை எங்கள் கொள்கை என வாய்ஜாலம் காட்டி பிதற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வேங்கைவயல் விவகாரம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக பாஜக செயற்குழு குறிப்பிட்டுள்ளது. பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த கொடூர குற்றவாளிகளை ஒரு மாதம் கடந்தும் கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை தோல்வியடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு, வழக்கை சிபிசிஐடி மாற்றியுள்ளதாக சாடியுள்ள பாஜக மாநில செயற்குழு, இனியாவது ஈவு இரக்கமற்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியுள்ளது.
பெண் இனத்தை காக்க தவறிய திமுக அரசுக்கு பாஜக மாநில செயற்குழு கண்டனம்
இது தொடர்பாக பாஜக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், எளிய மலைவாழ் குடும்பத்தில் பிறந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக பாஜக அமரவைத்ததாக தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத வகையில், மத்திய அமைச்சரவையில் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பெண்ணுரிமை பற்றி பேசும் திமுகவில், மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சியில், அவர் முன்னிலையிலேயே திமுக இளைஞர் அணி நிர்வாகிகள், பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர்களை மானபங்கப்படுத்தியதுடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயர் அதிகாரிகளை பயன்படுத்தி பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற வைத்துள்ளதாகவும் செயற்குழு குற்றம்சாட்டியுள்ளது.
இதுதான் பெண் இனத்தை காக்கும் லட்சணமா எனப் பெண்கள் காரி உமிழ்வதாக தெரிவித்துள்ள பாஜக செயற்குழு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடப்பதற்கு இதைத் தவிர வெட்கக் கேடான உதாரணம் தேவையில்லை எனக் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கையாலாகாத தனத்தை பாஜக செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
தமிழக விவசாயிகளையும், நெசவாளர்களையும் வஞ்சிப்பதற்கு பாஜக கண்டனம் …
ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் பொங்கல் பரிசில் கரும்பும் வழங்குவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டு, பாரதிய ஜனதா விவசாய அணியின் போராட்டத்துக்கு பின்னர் தான் கரும்பு வழங்கப்பட்டதை பாஜக செயற்குழு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கரும்பு கொள்முதலில் மாபெரும் ஊழல் நடத்தி விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்காமல் செய்ததாகவும், கரும்பு ஆலைகளுக்கு வரும் கரும்பை உற்பத்தி செலவை விட குறைந்த அளவு விலையிலேயே கொள்முதல் செய்வதாகவும் சாடியுள்ளது.
மேலும் நெசவாளர்களுக்கு உரிய நேரத்தில் நூல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொங்கலுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட வேஷ்டி சேலைகளை கூட வழங்க முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டதாகவும் செயற்குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் பாஜக மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
திமுகவின் ஊழல் ஆட்சியால் தொழில்துறையில் 4வது இடத்தில் தமிழ்நாடு …
திராவிட மாடல் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொன்று தொட்டு தொழில் வளர்ச்சியிலும் சர்வதேச வர்த்தகத்திலும் முன்னோடியாக இருந்து வந்த நிலையில், தமிழ்நாட்டு அமைச்சர்களின் கையேந்தும் செயலால் 2022ம் ஆண்டு நான்காம் இடத்திற்கு பின் தங்கியதாகவும், தமிழ்நாட்டை விட கர்நாடகா 7 மடங்கு அதிக அந்நிய முதலீடுகளை பெற்றுள்ளதாகவும் செயற்குழு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அக்கறை, எதிர்காலம் குறித்த பார்வை, நிர்வாக திறமை அற்ற மனிதர்களால் ஆளப்படும் அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் எனவும் தெரிவித்துள்ளது.
குடும்ப அரசியல், மிரட்டல் போக்கு, ஊழலில் உச்சம், ஊழல் அமைச்சர்கள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்து பார்வையில்லாத அறியாமை அமைச்சர்கள், உதயநிதி தான் உலகத் தலைவர் என பேசும் அடிமைகள் அமைச்சர்கள் என்ற பெயரில் உலவும் வரை நிர்வாக சீர்கேடு தவிர்க்க முடியாதது எனவும் கூறப்பட்டுள்ளது.திமுக ஊழல்கள் குறித்து அனைத்து ஒன்றிய நகர, பகுதி மண்டல்களிலும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது எனவும் பாஜக மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி நட்டாவுக்கு பாராட்டு …
கடந்த 2020 ஜனவரி 20ம் தேதி பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றது முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சிக்கு ஜே.பி நட்டா அரும்பாடுபட்டதாக பாஜக செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருந்த சில நாட்களிலேயே பொறுப்பேற்ற நட்டா, நாடு முழுவதும் உள்ள பாஜகவினரை களமிறக்கி மக்கள் பணியற்ற செய்ததாக பாராட்டு தெரிவித்துள்ளது.
பல மாதங்கள் பாஜகவினர் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் வியூகம் வகுத்து உலகின் தலைசிறந்த பொது சேவை கட்சியாக பாஜகவை விளங்க செய்ததாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.
கடந்த 17ம் தேதி இரண்டாவது முறையாக பாஜக தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி நட்டா,இந்தியாவின் பொற்காலத்தை காண பாஜகவினர் அனைவரும் புத்துணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றும், தலைவர் பொறுப்பை நன்றியோடும், பெருமையோடும் தான் தொடர்வதாகவும் தெரிவித்திருந்தார். இயக்கத்துக்கு தலைமையேற்று நடத்துமாறு தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை பணிவோடு ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்
அவரது இந்தப் பேச்சை மேற்கோள் காட்டியுள்ள பாஜக செயற்குழு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் எழுச்சி மிகு தலைமையில், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய இடைவிடாது பணியாற்ற உறுதி ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜேபி நட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் பாஜக மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.