உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பாரதத்தில் நுகர்வு தொடர்ந்து வலுவாக உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பொருளாதாரம் மிக நல்ல நிலையில் உள்ளது. தற்போது மூன்று உலகளாவிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று செயற்கை நுண்ணறிவு, இரண்டாவது புதுபிக்கத்தக்க ஆற்றல், மூன்றாவது நெகிழ்வான வினியோக சங்கிலி. இந்த மூன்றிலும் இந்தியா தனது சிறந்த பங்கை அளிக்கத் தயாராகி வருகிறது. வளர்ச்சியை அதிகரிக்க தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் உற்பத்தியை அதிகரித்தால் அது ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். இந்தியா தற்போது உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதில் முக்கியமான ஒன்று பி.எல்.ஐ திட்டம். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். அரசு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பது, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்கம் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்வே துறையில் கடந்த ஆண்டு முதலீடாக 23 பில்லியன் டாலராக இருந்தது. இது இந்த ஆண்டில் 26 பில்லியன் டாலராக அதிகரிக்கும். ரயில்வே மட்டுமல்ல நெடுஞ்சாலைத்துறை, பவர் டிரான்ஸ்மிஷன் போன்றவற்றிலும் இதே நிலைதான் உள்ளது. இது நாட்டின் நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிக்கும். மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார். இதில் பேசிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர், டாடா குழுமம், தனது வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 90 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக கூறினார்.