‘உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம்’ என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜெ.பி.நட்டா பேசியதாவது: ” உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதையும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எவ்வாறு போராடுகிறது என்பதையும் உலகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. ராணுவம் வலிமையாக இருக்கும் போதுதான், தேசம் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்ற பார்வையுடன் பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். அவரது தலைமையிலான அரசின் வெளியுறவுக் கொள்கை, நமது பாதுகாப்புப் படைகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. எந்த வகையான பயங்கரவாதத்தையும் இந்தியா ஆதரிக்காது; சகித்துக் கொள்ளாது என்பதை உலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் பிரதமர் மோடி. நாட்டின் பாதுகாப்புக்காக தீர்க்கமான முடிவுகளை அவர் மேற்கொள்கிறார். இந்திய ராணுவம், உலகிலேயே சக்திவாய்ந்ததாக கருதப்படுவதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைவதற்கு முன்பு, நீர்மூழ்கி கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், போர்விமானங்கள், குண்டு துளைக்காத கவச உடைகள் போன்றவை கொள்முதலில் ஊழல்தான் மேலோங்கி இருந்தது. தேவையான பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்கப்படவில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் நிலைமை மாறிவிட்டது.
ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இவ்வளவு குறைவான தொகையால் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு பிரதமர் மோடி அரசு ரூ.35,000 கோடி ஒதுக்கியது என்றார் ஜெ.பி.நட்டா. காஜிபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா, ‘நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதல் அளிப்பதற்காக, நெடுஞ்சாலைகள், இணையவசதி, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய 4 துறைகளுக்கு மத்திய அரசு மிக முக்கியத்துவம் அளிக்கிறது’ என்றார்.
‘ஒட்டுமொத்த உலகமும் நிதி நெருக்கடியில் தவிக்கும் நிலையில், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. மின்னணுவியல் துறையில் இந்தியா 6 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையின் ஏற்றுமதி மதிப்பு ரூ.70,000 கோடியாக அதிகரித்துள்ளது. கொ ரோனா காலகட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியது. மற்றவர்களிடமிருந்து பெறுபவர் என்ற நிலையில் இருந்து மற்றவர்களுக்கு அளிப்பவர் என்ற அந்தஸ்தை இந்தியா எட்டியுள்ளது’ என்றார்.