‘உலக பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமரின் நிர்வாகத் திறமையால் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது’ என, உலக பொருளாதார கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த நிகழ்வில் பங்கேற்ற பொருளாதார கூட்டமைப்பின் செயல் தலைவர் காலஸ் ஸ்வாப் பேசியதாவது:
இது, உலக நாடுகளுக்கு மிகவும் கடினமான காலம். பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது.சில நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதுபோன்ற கடினமான நேரத்தில், இந்திய பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது உலகம் முழுதும் பொருளாதார நெருக்கடி நிலவினாலும், மோடியின் நிர்வாக திறமையால், பொருளாதார ரீதியாக இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது.உலகின் மிக செல்வாக்கான நாடுகளின் இந்த காலகட்டத்தில் உலகில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான, நியாயமான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என இந்தியா ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சவால்களை முறியடித்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்து வருகிறது. உலக பொருளாதார அமைப்புக்கு இந்தியாவுடன், 40 ஆண்டு வரலாற்றுத் தொடர்பு உள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ஜி – 20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த சிறப்பான நேரத்தில், இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என உலக பொருளாதார அமைப்பு விரும்புகிறது. உலகம் முழுதும் உள்ள அரசு நிர்வாகங்களும், நிறுவனங்களும் மக்களின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அதேநேரத்தில் சிறப்பான எதிர்காலத்துக்கும் இங்குள்ள தலைவர்கள் அடித்தளமிட வேண்டும். இந்திய பிரதிநிதிகள் குழு என்னை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விஷயத்தில் உறுதியான நடவடிக்கை, சுற்றுச் சூழல் அமைப்பில் பங்களிப்பு, பெண்களின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்துதல், ‘டிஜிட்டல்’ கட்டமைப்பில் உலகிற்கு முன் உதாரணமாக திகழ்வது போன்ற விஷயத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை” என அவர் புகழ்ந்துள்ளார்.