நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான இன்று, அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நினைவு போற்றும் விதமாக 2018ம் ஆண்டு அந்தமான் நிகோபாரில் உள்ள ரோஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் சூட்டப்பட்டது. இதேபோல அந்த தீவில் அவரின் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேதாஜியின் 126வது பிறந்த நாளான இன்று, அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா வென்ற வீரர்களின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீர தீர செயல்கள் புரிந்து இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதை வென்ற 21 பேரின் பெயரை தீவுகளுக்கு சூட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்தமானில் தான் முதன்முதலாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதாக கூறினார். சுதந்திர இந்தியாவின் முதல் அரசும் அங்குதான் அமைந்ததாகத் தெரிவித்தார். வீர சாவர்க்கர் உள்ளிட்ட பல சுதந்திர வரலாற்று ஹீரோக்கள் அந்தமானில் சிறை வைக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
சுதந்திரம் கிடைத்த 75 ஆண்டுகளில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த வீரர்களை காங்கிரஸ் கட்சி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பிரதமராக நரேந்திரமோடி வந்த பிறகு முதன்முறையாக 2018ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஐ.என்.ஏ வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு 28 அடி உயர பளிங்கு சிலை நிறுவப்பட்டுள்ளது