ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால் மக்கள் சக்தியே வெல்லும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள், கோவை, குனியமுத்துாரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.தொடர்ந்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமானது. சட்டசபை தேர்தலின்போது, 505 வாக்குறுதிகளை கொடுத்து ஒன்றைக் கூட நிறைவேற்றாத தி.மு.க., அரசு, மக்களின் நம்பிக்கையை மிக வேகமாக இழந்து வருகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை வீழ்த்த இது சரியான சந்தர்ப்பம். அந்த அடிப்படையில் வலுவான கூட்டணி அமைப்போம்.
ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.க., இதில் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால் மக்கள் சக்தியே வெல்லும்” என அவர் கூறினார்.