போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிகோபர் யூனியன் பிரதேசத்தின் கீழுள்ள, 21 பெயரிடப்படாத தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.
அங்கு அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியையும் அவர் வெளியிட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 126வது பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபர் தீவுகளில் அமையவுள்ள அவருடைய நினைவிட மாதிரியை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளிக் கூட்டம்’ வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள, இதுவரை பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான, பரம்வீர் சக்ரா பெற்றவர்களின் பெயர் சூட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: நம் மூவர்ணக் கொடியை, 1943ல் முதல் முறையாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அந்தமானில் ஏற்றி வைத்தார்.
இந்த பெருமைமிகு அந்தமானில் அவருடைய நினைவிடம் அமைய உள்ளது. இது நம் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை மேலும் வளர்க்க உதவும்.
தாய் நாட்டுக்காக வீர, தீரத்துடன் போரிட்ட, 21 பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவத்தினரை கவுரவிக்கும் வகையில், அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு அவர்களுடைய பெயர் சூட்டப்படுகிறது.
இது, நம் இளம் தலைமுறையினருக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும். நாட்டின் விடுதலைக்காக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போரிட்ட வரலாற்றை மறைக்க முன்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், இதையெல்லாம் மீறி, நாடு முழுதும் அவருடைய பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேதாஜி தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் உத்தரவு, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகே பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். பிரதமரின் இந்த செயல் தங்கள் தியாகங்களுக்கு அங்கீகாரம் இல்லையே என இயங்கிவந்த ராணுவத்தினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.