மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய விமானப்
போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் டாக்டர் விஜய் குமார் சிங் ஆகியோர் இன்று கோல்ஹாப்பூரில் இருந்து
பெங்களூருக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்
ஜோதிராதித்ய சிந்தியா, கோல்ஹாப்பூரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, புதிய விமான
நிலைய முனையம், ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் ஏடிசி கோபுரம் நிறுவுதல் ஆகியவற்றுக்கு ரூ.245 கோடி முதலீடு
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை
மற்றும் பணியை மேம்படுத்தும் வகையில், இந்த வழித்தடத்தின் தொடக்கத்தின் மூலம் ஹைதராபாத், திருப்பதி,
மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்ட கோல்ஹாப்பூர் இன்று இந்தியாவின் சிலிக்கான்
தலைநகரான பெங்களூருவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் மூலம், புதிய வாய்ப்புகள் அதிகரித்து, இரு நகரங்களிலும் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் என்று
அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இந்த விமான நிலையத்திற்காக கோல்ஹாப்பூர் மக்களை வாழ்த்திய
மத்திய இணை அமைச்சர் டாக்டர் விஜய் குமார் சிங், இது அப்பகுதியில் வணிகம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை
மேம்படுத்த உதவும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சஞ்சய் சதாசிவராவ் மாண்ட்லிக், கோலாப்பூர் தெற்கு
எம்.எல்.ஏ. ருதுராஜ் சஞ்சய் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தவிர, மத்திய விமானப்
போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் எஸ்.கே. மிஸ்ரா, இண்டிகோ நிறுவனத்தின் முதன்மை
ஆலோசகர் ஆர்.கே. சிங் மற்றும் கோல்ஹாப்பூரில் உள்ள முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.