உலகின் உண்மையான ஜனநாயகத்தின் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் குடியரசு தினம் பெருமைக்குரியது என பாஜக தலைவர் அண்ணாமலை குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டு மக்கள் ஏற்படுத்திய சட்டங்களால் மக்களே ஆட்சி செய்யும் மக்கள் அரசு அமைந்த தினம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்
இந்திய அரசியலமைப்பு நமது நாட்டின் மிக உயர்ந்த சட்ட கட்டமைப்பு, அனைத்து குடிமக்களும், அரசு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய அடிப்படை உரிமைகள், வழிகாட்டுதல், கோட்பாடுகள் மற்றும் கடமைகள் என்று குடிமக்கள் அனைவரும் மதிக்கும் பின்பற்றும் சட்டத்தின் உறுதியான கட்டமைப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் நாடு என்றும் சட்டத்தை தன் உரிமையாக உயிராக மதிக்கும் மக்கள் வாழும் நாடு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்
அதனால் தான் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு, ஐ.நா பாதுகாப்பு சபை, சீனாவை உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் தலைமை பொறுப்பையும் இந்தியா ஏற்க உள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், உலக நாடுகள் வியந்து போற்றும் வகையில் பாரத பிரதமர் சரித்திர சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். 74வது குடியரசு தின விழா ஒவ்வொரு இந்தியரையும் பெருமை படவைக்கும் திருவிழாவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் அனைவருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.