இருளர் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பத்ம விருது !

செங்கல்பட்டை அடுத்த சென்னேரியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் 2 இருளர் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளதால் இருளர் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என பாம்பு பிடிக்கும் இருளர் தொழிலாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில் இருளர் பாம்புபிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் மூலமாக பாம்பு பிடிக்கும் சங்கம் இயங்கி வருகிறது. இந்தசங்கத்தில், 362 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில், குறிப்பாக பழையபெருங்களத்தூர், சென்னேரி, புதுப்பெருங்களத்தூர் மாம்பாக்கம், காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து விஷப்பாம்புகளை பிடித்து வரும், இருளர் பழங்குடியின மக்கள் அந்த பாம்புகளை நெம்மேலி பகுதியில் உள்ள பாம்பு பண்ணையில் வழங்கி விஷம் எடுத்து, பின்னர் மீண்டும் அந்தந்த வனப்பகுதிகளில் அவற்றை விடுவதை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்புகளை பிடித்து வரும் இருளர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தொழில் கூட்டுறவு சங்கம் மூலமாக இருளர் பாம்பு பிடிப்பு நல தொழில் கூட்டுறவு சங்கம் அமைத்து, தமிழக அரசுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில், உறுப்பினராக இருப்பவர்கள் வடிவேலு மற்றும் மாசி. கொடிய விஷமுடைய பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்களாக திகழ்ந்தனர்.

மேலும், பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்த வடிவேலு, மாசிஆகிய இருவரையும் அமெரிக்கா,தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு  சென்று அங்குள்ள கொடிய விஷம் உள்ள பாம்புகளை பிடித்து விஷம் எடுத்து வந்தனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளகொடிய விஷமுள்ள பாம்புகளை பிடிப்பதில் இருவரும் கை தேர்ந்தவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு பாம்பு பிடிக்கும் தொழிலாளிகளான இவர்களுக்கு பத்ம விருது அறிவித்துள்ளது.  . இதன்மூலம், மிகப்பெரிய அங்கீகாரம் இருளர் சமுதாய மக்களுக்கு கிடைத்துள்ளதாக அச்சமூகத்தை சேர்ந்தவர்கள்  பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாசியின் மனைவி சுசிலா ” பாம்புகளை பிடித்து கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் எங்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு இருளர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக கருதுகிறோம். மத்திய அரசுக்கும், இருளர் பழங்குடியின மக்களுக்கான இருளர் கூட்டுறவு பாம்பு பிடிப்பு நல சங்கத்துக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அவரது மகன் சுகேந்திரன் ” அடுத்த தலைமுறை இருளர் பழங்குடியின இளைஞர்களான நாங்கள் இத்தொழிலை தொடர்ந்து செய்யும் வகையில் எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்றார்.

பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு  சங்கத்தின் நிர்வாக இயக்குநர் தங்கராஜ் ” கடந்த 40 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வரும் எங்களுக்கென தனியாக எந்த அடையாளமும் இல்லாத நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த பத்ம விருது மூலமாக எங்களுடைய சங்கத்துக்கும், இருளர் பழங்குடியின இனத்துக்கும் ஓர் அடையாளம் கிடைத்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை பாம்பாட்டிகள் நாடு என்று கேலி செய்தான். அதை ஏற்றுக் கொண்டு அதை இழிவாகக் கருதி வந்தது காங்கிரஸ் அரசு. ஆனால் மோடி அரசு, சுய அறிவு, சுய ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த சமுதாயத்துக்கு பத்ம விருது கொடுத்து அவர்களை கௌரவத்தை மீட்டு இருக்கிறது. இனி அந்நிய நாடுகள் பாம்பு பிடிப்பதையும் கௌரவமாக பார்ப்பார்கள் என சொல்லவும் வேண்டுமா ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top