சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அறநிலையத்துறை அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்குவதற்கும், கணினிமயமாக்கவும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் கோயில் நிதி பயன்படுத்தப்பட்டது. கோயில்களை நிர்வகிப்பதற்காக, அறநிலையத்துறை சட்டம் அனுமதித்த மொத்த வருமானத்தில் 12 சதவீதத்திற்கு மேல் பன்மடங்கு தொகை வழங்கப்படுகிறது என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில்களின் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். சமீபத்தில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில், அறநிலையத் துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்றும் கோயில் நிதியில், டாய்லெட் கட்டுவது, தேவைக்கு அதிகமான கார்களை வாங்குவது, கூட்டச் செலவுகளை உண்டியல் பணத்தில் இருந்து எடுப்பது, பட்டர் பிஸ்கட் வாங்கி சாப்பிடுவது என்று அறநிலையத் துறை அட்டூழியங்களை பாஜக தலைவர் அண்ணாமலை தோலுரித்துக் காட்டியது நினைவு கூரத்தக்கது.