பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினமான நேற்று, திருப்புட்குழி ஊராட்சி தலைவரை தேசிய கொடியேற்ற விடாமல் தடுத்த, தி.மு.க.வினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுகுணாமேரி உள்ளார். இவருக்கும், அப்பகுதியில் உள்ள தி.மு.க.,வினருக்கும் ஏற்கனவே அரசியல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்கு முன் ‘ஜாதி’ பெயரை சொல்லி திட்டியதாக சிலர் மீது, சுகுணாமேரி புகார் அளித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் பிரச்னை நீட்டித்து வருகிறது.
இந்நிலையில், 74வது குடியரசு தினமான நேற்று காலை, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றுவதற்கு, ஊராட்சி தலைவர் சுகுணாமேரி சென்றுள்ளார். அதற்கு திருப்புட்குழி தி.மு.க. கிளை கழக செயலரான பாலச்சந்திரன் மற்றும் சிலர் சுகுணா மேரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை கொடியேற்ற விடாமலும் தடுத்தனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய திமுக ஆட்சியில் பட்டியல் இன ஊராட்சி மன்றத் தலைவா்களான சகோதர சகோதரிகள், தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம், தொடா்ந்து நிகழ்வதுடன், அவா்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.
“காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சித் தலைவா், சுகுணா தேவேந்திரனை திமுகவின் தூண்டுதலினால் குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்திருக்கின்றனா். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்து, தமிழக பாஜக தலையிட்டதால், கொடியேற்ற அனுமதித்தனா்.
“இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள், தமிழகம் முழுவதும் நடந்தேறுகின்றன. சமூகநீதி பேசிக்கொண்டே அதைக் காற்றில் பறக்கவிடும் திமுகவின் பகல் வேஷம், தொடா்ந்து கலைந்து கொண்டிருக்கிறது. பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழக முதல்வரின் மௌனம் அவலத்தின் உச்சம்” என்று கூறியுள்ளாா்.