இந்த ஆண்டியின் குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு 106 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் தமிழகத்தில் விருது பெற்றவர்கள் ஆறு பேர்கள். பிற மாநிலங்களில் விருது பெற்ற ஓரிருவரை இங்கே நாம் அறிமுகம் செய்கிறோம்.
திரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள்: ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி சின்ன ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமிஜி, ஜீயர்கள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் சீடர்களின் மிகவும் மதிக்கப்படும் துறவிகளின் வரிசையைச் சேர்ந்தவர். எப்போதும் மகிழ்ச்சியாகவும், இடைவிடாது சுறுசுறுப்பாகவும், தனது உடல் சுகங்களை பொருட்படுத்தாமல், மற்றவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவராகவும் இருப்பவர். எங்கு சென்றாலும் அங்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துபவர். வேத ஞானம், ஆன்மீக நடைமுறைகள், மத சகிப்புத்தன்மை, அகிம்சை, பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மூலம் உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இடைவிடாமல் கடுமையாக பாடுபட்டு வருபவர்.
எஸ்.ஆர் ஸ்ரீநிவாச வரதன்: சாத்தமங்கலம் ரங்க அய்யங்கார் ஸ்ரீநிவாச வரதன் எனப்படும் எஸ்.ஆர் ஸ்ரீநிவாச வரதன், கணிதத்தில் சாதனை புரிந்துள்ள தமிழர். அமெரிக்காவில் குடியேறியவர். அந்நாட்டின் மிக உயர்ந்த விருதான நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் விருது பெற்றவர். நோபல் பரிசுக்கு இணையான கணிதத்திற்கு வழங்கப்படும் அபெல் விருது பெற்றவர்.
எஸ்.எல் பைரப்பா: உண்மையின் உரைகல் எஸ்.எல் பைரப்பாவிற்கு பத்ம பூஷண் விருது வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துள்ளது மத்திய அரசு. வாசகர்களை சிந்திக்க வைக்கும் உண்மைத் தரவுகளைக் கொண்டு சரித்திர சமூக நாவல்களை படைத்துள்ளவர்.
கிருஷ்ணா எல்லா, சுசித்ரா: கோவக்சின் தடுப்பு மருந்து தயாரித்து கொரோனா பெரும் தொற்றிலிருந்து தேசத்தைக் காத்திட்ட கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா ஆகியோருக்கும் மத்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்து பெருமை சேர்த்துள்ளது.
சுதா மூர்த்தி: சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆவார். உலகப்புகழ் பெற்ற இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் சிறந்த சமூக சேவகியும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி, தனது அறக்கட்டளையின் பொதுமக்களின் நல்வாழ்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டு பணிகளை ஆற்றி வருகிறார்.
கீரவாணி: கொடுரி மரகதமணி கீரவாணி, திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியா திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், பிலிம் ஃபேர் விருது, ஆந்திர அரசின் நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில்வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இவரது ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதையும் கிரிட்டிக் சாய்ஸ் விருதையும் வென்றுள்ளது.