அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி முருகன் கோவில். உலக பிரசித்தி பெற்ற இங்கு 16 வருடங்களுக்கு பிறகு தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
திரும்பும் இடமெல்லாம் முருகா! முருகா! மற்றும் அரோகரா முழக்கங்கள் விண்ணை எட்டின.
கோவில் கும்பாபிஷேகம், காலை 4.30 மணிக்கு 8ம் கால யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. பின் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடந்தது.
காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடும், அதை தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்பட்டு சுவாமியின் ராஜகோபுரத்தில் உள்ள தங்க கலசங்களின் மேல் புனித நீர் உற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது ராஜ கோபுரங்களில் மீது வானில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. இந்த கோவிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கடைசியாக 2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 2018 ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற்றுள்ளது
கும்பாபிஷேகத்தில் 2,000 பேர் மட்டும் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர் . கும்பாபிஷேகம் முடிந்த பின் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள் மீது 8 இடங்களில் இருந்து புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பழனி மலை கும்பாபிஷேகத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்து.