“சர். டி.சதாசிவ அய்யரும், அண்ணாமலையும்!”
என்று தன் 26/01/2023 தலையங்கத்தில் முரசொலி புலம்பித் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த பட்டியலையும், முதல்வர் எவ்வளவு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்ற புள்ளிவிவரங்களையும் குறிப்பிட்டு, தி மு க வின் சாதனைகளாக மார் தட்டி கொண்டுள்ளது. அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறிக்கொண்டு பதில் கூறியுள்ளது முரசொலி தலையங்கம்.
ஆனால், உண்மைக்கு புறம்பான தகவல்களை அடித்து விட்டிருக்கிற முரசொலியின் சில கேள்விகளும் அதற்கான என் பதில்களும் இதோ,
- “ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 3986 கோவில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சொல்கிறது”.
அனுமதி வழங்குவதற்கு அதிகாரமில்லாத அறநிலைய துறை எப்படி அனுமதி வழங்க முடியும்?
- “தி மு க ஆட்சி அமைந்த பின்னர் ரூ.3000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன”.
பல ஆண்டுகளாக நடைபெற்ற வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் அந்த சொத்துக்கள் தொடர்புடைய கோவில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அரசிடம் அல்ல என்பதே உண்மை. ஆனால், அந்த சொத்துக்களை அரசே மீட்டது என்ற மாயையை உருவாக்குவது வேடிக்கை.
- “இருட்டாக இருக்கும் இடத்தில் விளக்கு போட்டுவிட்டால் சிலருக்கு பிடிக்காது”.
ஹா ஹா ஹா ! வெளிச்சமாக இருக்கும் இடத்தை இருட்டாக்க தி மு க ஏன் நினைக்கிறது என்று தான் கேட்கிறோம்.
- “அரசாங்க சொத்தை தனியார் சொத்தாக மாற்ற நினைக்கும் முயற்சி தான், அறநிலைய துறைக்கு எதிரான அவதூறுகள் ஆகும்”.
கோவில்களின் சொத்துக்கு சொந்தக்காரர் அந்த கோவிலின் மூலவரே, அதாவது ‘தெய்வமே’ என்பது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு. ஆனால், அதை அரசாங்கத்தின் சொத்தாக மாற்ற நினைப்பது சட்ட விரோதம்.
- “ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு முதல் தலைவராக இருந்தவர் சர். டி.சதாசிவ அய்யர் என்பதை மறந்து விடாதீர்கள்”.
சபாஷ்! திராவிட முன்னேற்ற கழகம் தன்னை பாதுகாத்து கொள்வதற்கு, தற்போது ஒரு அய்யரை, பிராமணரை, சாட்சிக்கு, துணைக்கு அழைப்பதே அண்ணாமலையின் விமர்சனத்திற்கு, பாஜகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான்.
இந்த தலையங்கத்தை எழுதியதற்கு பதில் (புலம்பியதற்கு பதில்) இது நாள் வரை ஹிந்து தெய்வங்களுக்கு எதிராக திமுக செயலாற்றியதற்கு மன்னிப்பு கேட்டு கொண்டு, இனி இது போன்ற தவறுகள் நிகழாது என்று முரசொலி தலையங்கம் உறுதி கொடுத்திருக்கலாம்.